வழிபாடு

அலிபிரி பாத மண்டபத்தில் சிறப்பு பூஜைகள்: பஜனை மண்டல யாத்திரை நிறைவு

Published On 2023-07-13 03:21 GMT   |   Update On 2023-07-13 03:21 GMT
  • பெண் பக்தர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்தும், கற்பூரம் ஏற்றியும் ஊர்வலமாகச் சென்று திருமலையை அடைந்தனர்.
  • மண்டல உறுப்பினர்கள் பாரம்பரிய பஜனைகளை பாடியபடி திருமலையை அடைந்தனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்ய திட்டம் சார்பில் திருப்பதி, திருமலையில் 3 நாட்கள் பஜனை மண்டல யாத்திரை எனப்படும் படித்திருவிழாவை ஏற்பாடு செய்து நடத்தியது.

3-வது நாளான நேற்று அதிகாலை திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 3-வது சத்திரத்தில் தொடங்கிய பஜனை மண்டல யாத்திரை அலிபிரி பாத மண்டபத்தை அடைந்தது. அங்கு, தாச சாகித்ய திட்ட சிறப்பு அலுவலர் ஆனந்ததீர்த்தாச்சாரியார் மற்றும் சீனிவாஸ் ஆகியோர் சேர்ந்து அங்குள்ள படிக்கட்டுகளுக்கு சிறப்புப்பூஜைகள் நடத்தி பஜனை மண்டல யாத்திரையைத் தொடங்கி வைத்தனர்.

யாத்திரையில் பங்கேற்ற ஏராளமான பெண் பக்தர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்தும், கற்பூரம் ஏற்றியும் ஊர்வலமாகச் சென்று திருமலையை அடைந்தனர். அங்கு அவர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இத்துடன் பஜனை மண்டல யாத்திரை நிறைவடைந்தது.

படிபூஜையில் பங்கேற்ற சீனிவாஸ் பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையானை புகழ்ந்து பல்வேறு பக்தி பாடல்களை பாடிய புரந்தரதாசர், திருவியாச ரஜயதேஸ்வர், தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார், விஜயநகர பேரரசர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் ஆகியோர் ஏழுமலையான் மீதிருந்த அதீத பக்தியோடு அலிபிரி பாதையில் நடந்து திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அவ்வாறு சாமி தரிசனம் செய்த அவர்கள், ஏழுமலையானின் மகிமையைப் பரப்பி உள்ளனர். அப்படிப்பட்டவர்களின் அடிச்சுவடுகளை நாம் அனைவரும் பின்பற்றி, ஏழுமலையானின் அருளுக்கு தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பதி தேவஸ்தானம் படி உற்சவத்தை நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

யாத்திரையில் பஜனை மண்டல உறுப்பினர்கள் பாரம்பரிய பஜனைகளை பாடியபடி திருமலையை அடைந்தனர். அதில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பஜனை மண்டல உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News