வழிபாடு

காஞ்சீபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா

Published On 2022-12-01 05:40 GMT   |   Update On 2022-12-01 05:40 GMT
  • திருக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
  • நாதசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று விளக்கொளிப் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் தெப்பத்திருவிழாவையொட்டி கோவிலில் இருந்து உற்சவர் விளக்கொளிப் பெருமாள் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவியருடனும் மற்றும் மரகதவல்லித்தாயாருடனும் அருகிலுள்ள வேதாந்த தேசிகர் சந்நிதியில் காட்சியளித்தார்.

அங்கு தேசிகருக்கு மரியாதை உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் வேதாந்த தேசிகருடன் பெருமாளும், தாயாரும் தெப்பத்திற்கு எழுந்தருளி கேடயத்தில் திருக்குளத்தை வலம் வந்தனர். பின்னர் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமர்ந்து 7 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தெப்பத்திருவிழாவையொட்டி திருக்கோவிலும், திருக்குளமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைளும் நடைபெற்றன. நாதசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. விழாவையொட்டி, காஞ்சீபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் திருக்குளத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, நிர்வாக அறங்காவலர் என்.தியாகராஜன், அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெள்ளைச்சாமி, ஸ்ரீதரன், மற்றும் காஞ்சீபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News