படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவில் புரட்டாசி உற்சவம் 24-ந்தேதி தொடங்குகிறது
- திருவிழா 24-ந்தேதி தொடங்கி, 5 வாரங்கள் சனிக்கிழமைதோறும் நடக்கிறது.
- விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது.
கண்ணமங்கலம் அருகே படவேடு ஜவ்வாதுமலை ராஜகம்பீரம் என்ற கோட்டை மலையில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ராஜகம்பீர சம்புவராய மன்னரால் 2,160 அடி உயர மலையில் கட்டப்பட்ட வேணுகோபாலசாமி கோவிலில் புரட்டாசி மாத 47-ம் ஆண்டு உற்சவ திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்கி, 5 வாரங்கள் சனிக்கிழமைதோறும் நடக்கிறது.
இதை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு, அபிஷேகம், ஆராதனை, பஜனைகள் நடக்கிறது. மலைப்பாதை வழியாக டிராக்டர் மூலம் பக்தர்கள் செல்கின்றனர். திறமையான மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வசதியும் உள்ளது. தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலையில் உற்சவர் அலங்காரம் செய்து படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடக்கிறது. 24-ந் தேதி சாமிக்கு சீனிவாசர் அலங்காரம், 2-வது சனிக்கிழமை அக்டோபர் 1-ந் தேதி நர்த்தன கிருஷ்ண அலங்காரம், 8-ந் தேதி வைகுண்டநாதன் அலங்காரம், 15-ந் தேதி நாச்சியார் திருக்கோல அலங்காரம், 22-ந் தேதி வெண்ணைத் தாழி அலங்காரம் செய்யப்படுகிறது.
மேலும் விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை படவேடு கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.