வழிபாடு

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில்பூ பல்லக்குடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவு

Published On 2022-11-12 07:52 GMT   |   Update On 2022-11-12 07:52 GMT
  • இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
  • இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்ததார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் கண்டருளி, இரவு 8 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடு, இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

மேலும் சந்திர கிரகணம் நாளான 8-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடை சாத்தப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்து இரவு 9 மணிக்கு ஊஞ்சல் கண்டருளல் நடைபெற்றது. பின்னர் இரவு 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைந்தார்.

கடைசி நாளான நேற்று சாற்று மறையுடன் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்ந்தார். இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் கண்டருளல் சேவை நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 9 மணி அளவில் தாயார் மண்டபத்தில் இருந்து பூ பல்லக்கில் புறப்பட்டு கோவிலை வலம் வந்தார். இரவு 10 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவையுடன் இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

Tags:    

Similar News