வழிபாடு

தலைமை பூசாரி குண்டம் இறங்கி தொடங்கி வைத்ததையும், திருவிழாவை காண திரண்ட பக்தர்களையும் காணலாம்.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

Published On 2023-07-25 06:04 GMT   |   Update On 2023-07-25 06:04 GMT
  • பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
  • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.

கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து 6 மணிக்கு தலைமை பூசாரி ரகுபதி அம்மனின் சூலத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் எலுமிச்சை மற்றும் பூக்கட்டுகளை குண்டத்தில் உருட்டி விட்டு அதன் பின்னர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், செயல் அலுவலரும், திருக்கோவில் உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டி.எஸ்.பி.க்கள் தென்னரசு, பாலாஜி, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 12 இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 550 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவிலின் பல்வேறு பகுதிகள் குறிப்பாக குண்டம் இறங்குமிடம், பவானி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடங்கள், காணிக்கை செலுத்தும் இடங்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி காமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்தனர். 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

பக்தர்கள் வசதிக்காக கோவை, மேட்டுப்பா ளையம், அன்னூர் போன்ற இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News