வழிபாடு

குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி

Published On 2022-12-12 10:17 IST   |   Update On 2022-12-12 10:17:00 IST
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
  • அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அரக்கனால் தனது சக்தியை இழந்த சூரியபகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றார் என்பது ஐதீகம்.அந்த வகையில் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குத்தாலம் காவிரி படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கார்த்திகை மாத கடைஞாயிறையொட்டி குத்தாலம் காவிரி படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது.

இதை முன்னிட்டு குத்தாலம் உக்தவேதீஸ்வரர், மன்மதீஸ்வரர் ஆகிய கோவில்களில் இருந்து சாமி மற்றும் அம்மன், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்திலும், வெள்ளி மயில்வாகனத்திலும், வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி ஊர்வலமாக காவிரி கரைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

இதை தொடர்ந்து சாமிகளுக்கு ஒரே நேரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் ஆதிகேசவபெருமாள் காவிரி கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

தீர்த்தவாரியையொட்டி குத்தாலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வீதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News