வழிபாடு

சுப்புலட்சுமி காலபைரவரை வணங்கும் காட்சி

அதியமான்கோட்டையில் காலபைரவரை தினமும் தரிசனம் செய்யும் நாய்

Published On 2023-07-11 05:52 GMT   |   Update On 2023-07-11 05:52 GMT
  • இந்த கோவிலில், சுப்பு (எ) சுப்புலட்சுமி என்ற பெண் நாய் வளர்ந்து வருகிறது.
  • சுப்புலட்சுமியை கால பைரவராகவே பக்தர்கள் கருதுகின்றனர்

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், காசிக்கு அடுத்த மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தட்சிண காசி காலபைரவர் கோவில் உள்ளது.

சுமார் 1500 ஆண்டு பழமையான இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை நாளில், அஷ்டமி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்கள். காலையில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகத்தை காண, பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம்.

இது தவிர, ராகுகால பூஜை, மாலை 6 மணிக்கு மிளகாய் வற்றல் மூலம் நடத்தப்படும் யாகம், எதிரிகளை ஒழிக்கும் சத்ரு சம்ஹார யாகம், குருதியாகம் ஆகியவை இங்கு நடத்தப்படுகிறது.

இந்த பூஜைகளில் வெளி மாநில விஐபி பக்தர்கள் கலந்து கொள்வர். இங்கு நடக்கும் பைரவர் ஜெயந்தி விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

விழாக்காலத்தின் போது, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இந்த காலபைரவர் கோவிலில், சுப்பு (எ) சுப்புலட்சுமி என்ற பெண் நாய், கடந்த 6 வருடமாக வளர்ந்து வருகிறது. கோவில் பக்தர்கள் கொடுக்கும் பிஸ்கெட், பால் போன்றவற்றையும், ஊழியர்கள் தரும் பால் சாதத்தை மட்டும் சாப்பிடுகிறது. அசைவ உணவை சாப்பிடுவதில்லை.

மேலும், கோவிலை விட்டு வேறு எங்கும் செல்வதும் கிடையாது. இந்த நாய் காலையில் 6 மணிக்கு நடை திறக்கும்போது அய்யருக்கு முன்னால் உள்ளே சென்று விட்டு திரும்பும்.

இதேபோல் மாலை 4 மணிக்கு நடை திறந்ததும் உள்ளே சென்று கால பைரவரை பார்த்துவிட்டு திரும்பும். சில நாட்களில் அடிக்கடி கோவில் உள்ளே சென்று விட்டு திரும்புகிறது. அதன் பின்னர் கோவில் வளாகத்திலோ அல்லது அறநிலையத்துறை செயல் அலுவலர் அறையிலோ படுத்துக் கொள்வது வழக்கம்.

காலபைரவரை தினமும் நாய் வழிபடும் அதிசயம், வேறு எங்கும் இல்லை என்பதால், இந்த காட்சியை பார்க்கும் பக்தர்கள் மெய்சிலிர்த்து போகின்றனர்.

இதுபற்றி கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் கூறுகையில், கடந்த 6 வருடமாக சுப்பு இங்கே வளர்ந்து வருகிறது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும்.

தினமும் கோவில் நடை திறக்கும் சத்தம் கேட்டதும், கருவறைக்குள் சென்று மூலவரை சுற்றி வந்து, பின்னர் கோயில் வளாகத்தில் படுத்துக்கொள்கிறது.

கோவிலை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. இதற்கு முன்பு பல நாய்கள் இங்கு வளர்ந்த போதும், சுப்பு மட்டுமே பைரவரை தினமும் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

எனது அறையில் படுத்திருக்கும் சுப்பு வெளியறினால் நல்லது என நாம் நினைத்தால், உடனே அறையை விட்டு வெளியேறி விடும். அந்த அளவிற்கு நாம் நினைப்பதை உணரும் சக்தியும் இந்த சுப்புக்கு உண்டு. சுப்புலட்சுமியை கால பைரவராகவே பக்தர்கள் கருதுகின்றனர் என்றார்.

Tags:    

Similar News