வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2025-07-24 10:26 IST   |   Update On 2025-07-24 10:26:00 IST
  • ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது.
  • காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள், தோஷங்கள் மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கி விடும்.

அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரிக்கரை ஓரத்தில் அதிகாலையில் ஏராளமானோர் குவிந்தனர்.

ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில், ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.

இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் அரூர் அடுத்த தீர்த்தமலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் இன்று ராமர், கவுரி உள்ளிட்ட 5 தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தீர்த்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

அதேபோல், டி.அம்மாபேட்டை, இருமத்தூர் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில், தை அமாவாசை வழிபாடு நடந்தது.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். ஆற்றின் கரையில், ஏராளமான பொதுமக்கள் பூஜை செய்து, முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். 

Tags:    

Similar News