வழிபாடு
ஆதிசங்கரர்

தங்க நெல்லிக்கனி திருவிழா

Published On 2022-05-04 11:33 IST   |   Update On 2022-05-04 11:33:00 IST
கனகதாரா ஸ்தோத்திரம் என்ற தொகுப்பை ஆதிசங்கரர் பாடி முடித்ததும், அந்த வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள் மழை போல பொழிந்தன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம்பெரியாற்றின் கரையில் காலடி என்ற ஊர் உள்ளது. அங்கு சிவகுரு- ஆர்யாம்பாள் தம்பதியின் மகனாக 8-ம் நூற்றாண்டில் அவதரித்தவர் ஆதிசங்கரர்.

சிறு வயதில் அவர் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். குருகுல வழக்கப்படி பிச்சை எடுத்து தான் குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அதன்படி ஆதிசங்கரர் ஒரு குடிசை வீடு முன்பு நின்று “பவதி பிட்சாந்தேஹி” என்று குரல் கொடுத்து பிச்சை கேட்டார். இதை கேட்டதும் அந்த வீட்டில் இருந்தபெண் நடுங்கினாள்.

தானம் செய்ய எந்த உணவுபொருளும் இல்லாததால் தவித்தாள். வீடு முழுக்க தேடிய அவளுக்கு காய்ந்து போன நெல்லிக்கனி தான் கிடைத்தது. அதை எடுத்து வந்து கண்ணீர் மல்க ஆதி சங்கரரிடம் கொடுத்து, “குழந்தாய், இந்தா, என்னிடம் இது தான் உள்ளது” என்று கொடுத்தார். அந்தபெண்ணின் தான உள்ளத்தையும், ஏழ்மையையும் உணர்ந்த ஆதிசங்கரர் வேதனைப்பட்டார். உடனே மகாலட்சுமியை மனம் உருகப்பாடினார். கனகதாரா ஸ்தோத்திரம் என்ற தொகுப்பை அவர் பாடி முடித்ததும், அந்த வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள் மழை போல பொழிந்தன.

ஒரு அட்சய திருதியை தினத்தன்று தான் தங்க நெல்லிக்கனி மழைபொழிந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் காலடியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அட்ச திருதியை தினத்தன்று திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அப்போது 32 நம்பூதிரிகள் 10 ஆயிரத்து எட்டு தடவை கனகதாரா ஸ்தோதிரத்தை சொல்வார்கள்.

பிறகு பக்தர்களுக்கு தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், மற்றும் கனகதாரா யந்திரம் வழங்கப்படும். இந்த நெல்லிக்கனிகளை பூஜை அறையில் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம் படித்தால் செல்வம்பெருகும் என்பது நம்பிக்கை.

Similar News