வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க வலியுறுத்தல்

Published On 2022-04-28 11:03 IST   |   Update On 2022-04-28 11:03:00 IST
நடை பாதையாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவலுக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் திருப்பதிக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் அலிபிரி பூ தேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ் சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.

தரிசன டோக்கன் பெறுவதற்காக பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்கி வந்தனர். அதேபோல் தற்போதும் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடாகாவில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் சென்று தரிசன டிக்கெட் பெற்று திருப்பதியில் வழிபாடு செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புயல் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அலிபிரியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்லும் சாலை மற்றும் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் மரங்கள் விழுந்தும் பாறைகள் உருண்டு விழுந்தும் பலத்த சேதமடைந்தன.

சேதமடைந்த அலிபிரி நடைபாதை சீரமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.

இதனால் நீண்ட தூரத்திலிருந்து நடைபாதையாக வரும் தக்கர்கள் தரிசனத்திற்கு சிரமம் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கியதை போல் மீண்டும் தரிசனம் டோக்கன் வழங்க வேண்டும்.

நடை பாதையாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 75,078 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,674 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.34 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Similar News