ஆன்மிகம்
மசூதி

கேரளாவில் ஆலப்புழா மர்க்காஸ் மசூதியில் இன்று கூட்டு பிரார்த்தனை

Published On 2021-11-26 07:47 GMT   |   Update On 2021-11-26 07:47 GMT
இன்று மர்க்காஸ் மசூதியில் நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள இந்து, பெளத்தம் மற்றும் கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் உள்பட சுமார் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இடையே சமீப காலமாக லவ்ஜிகாத், போதை ஜிகாத் உள்ளிட்ட சர்ச்சை எழுந்தது.

இதனால் மத பிரதிநிதிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்தவ ஆயர் ஒருவர், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த இளம் பெண்களை மத மாற்றம் செய்யும் வகையில் போதை ஜிகாத் நடைபெறுவதாக புகார் கூறினார். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆலப்புழா சக்காரியா பஜாரில் உள்ள பிரசித்தி பெற்ற மர்க்காஸ் மசூதியில் அனைத்து மத பிரதிநிதிகளும் பங்கேற்கும் வகையில் கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த மசூதி நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

இன்று மர்க்காஸ் மசூதியில் நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள இந்து, பெளத்தம் மற்றும் கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் உள்பட சுமார் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பிரார்த்தனையில் கலந்து கொள்கின்றனர். மேலும் மசூதியில் முஸ்லிம் மத குரு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கிலும் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து மர்க்காஸ் மசூதி நிர்வாகி அஸ்ரப் கூறியதாவது:-

மசூதியில் பிற மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள தடை கிடையாது. தற்போது தேவையற்ற விவாதங்கள் நடைபெற்று வருகிறது. எனவே மாநிலத்தில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மசூதியில் அனைத்து மத கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News