ஆன்மிகம்
ஏடுடன் திருவிதாங்கூர் தம்புராட்டி லெட்சுமிபாய் மற்றும் பக்தர்கள் கோவிலை வலம் வந்த போது எடுத்த படம்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த ஆண்டு ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம்

Published On 2021-10-25 04:51 GMT   |   Update On 2021-10-25 04:51 GMT
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த ஆண்டு ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என தேவபிரசன்னத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3-வது நாளாக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. கேரளாவைச் சேர்ந்த வாசுதேவன் பட்டத்திரி தலைமையிலான ஜோதிடக்குழுவினர் தேவபிரசன்னம் நடத்தினர்.

3-வது நாளாக நடந்த தேவபிரசன்னத்தில் கூறியிருப்பதாவது:-

கோவிலுக்கு சொந்தமாக பசு வாங்க வேண்டும். வெளியில் இருந்து பால் பெற்று பகவானுக்கு அபிஷேகம் செய்வது ஏற்புடையது அல்ல. எனவே இங்கேயே பசுவை வளர்த்து அதை பராமரித்து, அதன் பாலை பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பால் பாயாசம் சிறப்பாக தயாரித்து சுவாமிக்கு நிவேத்யம் செய்ய வேண்டும்.

துளசி, அரளி, தாமரை ஆகிய மலர்கள் பயன்படுத்தலாம். செவ்வந்தி கூடாது. இங்கிருந்தே மலர்களை பறித்து அவற்றை கட்டி பகவானுக்கு சார்த்த வேண்டும். எனவே கோவிலில் தாராளமாக இடம் இருப்பதால் பூங்கா அமைக்க வேண்டும். பெண் தொடர்பான, நடக்கக் கூடாத சம்பவம் ஏதோ கோவில் வளாகத்தில் நடந்துள்ளதாக பிரசன்னத்தில் காணப்படுகிறது. இனி இதுபோல் நடக்காமல் இருக்க பார்த்துக் கொள்வது நல்லது.

இங்கு இசை கருவிகள் இசைக்கும் போது பகவான் முகம் திருப்புகிறார். எனவே நன்கு இசை தெரிந்த இசை கலைஞர்களை வைத்து பூஜை நேரங்களில் இசைக்கப்பட வேண்டும். மக்கள் கலந்து கொண்டு நாம ஜெபத்தில் ஈடுபட வேண்டும். மன்னர் காலத்தில் ஆடி மாதத்தில் கஞ்சியும், பலாக்காயும் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் சேர்த்து வழிபாடு செய்து அதை பக்தர்களுக்கு வழங்கியுள்ளனர்.

அவை எல்லா நோய்களுக்கும் அருமருந்தாக இருந்துள்ளது. அவை மீண்டும் வழங்க வேண்டும். மேலும் பாயாசம், அப்பம், வடை முதலானவை பகவானுக்கு படைக்க வேண்டும். வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை விழா நடத்துவது போல் இந்த ஆண்டு ஐப்பசி, பங்குனி மாத 10 நாள் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தலாம்.

கடவுள் சன்னதியில் எல்லோரும் ஒற்றுமையுடன் நடந்து விழாக்களை நடத்த வேண்டும். எல்லா குறைகளும் அகலும் காலம் இது.

ராமாயண சத்சங்கம், நாம ஜெபம் உடனே தொடங்க வேண்டும். கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். மேலும் அனைத்து பரிகார பூஜைகளையும் கும்பாபிஷேகத்துக்கு முன்பு நடத்த வேண்டும். கோவில் பூஜைகள் 2 தந்திரிகளை வைத்து நடத்த வேண்டும்.

கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பு கோவிலோடு தொடர்புடைய வாழ்வச்சகோஷ்டம் மகிஷாசுர மர்த்தினி கோவிலுக்கு விளக்கு வாங்கிக் கொடுத்து தீபமேற்ற வேண்டும். அதுபோல் கோவிலைச் சுற்றி உள்ள ஜடாதீஷ்வர, தளியன் சிவன் கோவில்களில் வழிபாடு நடத்த வேண்டும். வெங்கடாசலபதி சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். வேறு சிலைகள் எதுவும் கோவிலில் பிரதிஷ்டை செய்யக்கூடாது. பாலாலயத்தில் இருந்து உற்சவமூர்த்திகளை கருவறைக்கு மாற்றினாலும் அந்த இடத்தில் பூஜைகள் வைத்து நைவேத்யம் நடத்த வேண்டும்.

தேவபிரசன்னம் தொடங்கிய நாளில் கன்னிராசியில் தங்கம் வைக்கப்பட்டது. தற்போது இறுதி நாளில் சோழி உருட்டியபோது கன்னிராசியில் தங்கம் மலர்ந்ததால் எல்லாமே இனி நன்றாகவே நடக்கும். அஷ்டமத்தில் சந்திரன் ஒன்பதில் சென்றதால் எல்லா தோஷங்களும் அகன்று விட்டது. இனி எல்லாமே நன்மையே. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும்” என்றனர்.

அப்போது கோவில் பக்தர்கள் சிலர் ”கும்பாபிஷேகத்துக்கு முன்னர் கோவிலில் சாமிக்கு நகைகள் அனைத்தும் அணிவிக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினர். அப்போது பிரசன்னம் பார்த்தவர் ”அது கோவில் நிர்வாகம் தொடர்புடைய விஷயம்” என்றார். உடனே அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார், ”தற்போது கருவூலத்தில் இருக்கும் நகைகள் அணிவிக்கப்படும்” என்றார்.

பின்னர் கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்டது. ஜோதிடர்கள் சோழி உருட்டியும், பஞ்சாங்கம் வைத்தும் இறுதியாக அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி உத்திரம் நட்சத்திரத்தில் காலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தலாம் என கூறினர். இந்த நாள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்ற பின்னர் கும்பாபிஷேக நாளாக அறிவிக்கப்படும்” என கோவில் மேலாளர் மோகன் குமார் தெரிவித்தார்.

பின்னர் திருவிதாங்கூர் தம்புராட்டி லெட்சுமி பாய் பேசுகையில்," நாங்க திருவிதாங்கூர் வம்சத்தவர்களாக இருந்தாலும் பத்மனாபபுரம் கொட்டாரத்தில் எங்கள் முன்னோர் ஆண்ட போது வணங்கிய ஆதிகேசவப்பெருமாளை எப்போதுமே வணங்கி வந்துள்ளோம். இடையே கோவில் பராமரிப்பின்றி இருந்தது. இப்போது கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத்தருகிறது "என்றார். பின்னர் வாசுதேவன் பட்டத்திரியிடம் இருந்து கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்ட ஏட்டை பெற்றுக் கொண்டார். பின்னர் அவரும், பக்தர்களும் கோவிலை வலம் வந்தனர்.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கொடிமரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இப்போது அதே நாள் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News