ஆன்மிகம்
சுந்தரராஜ பெருமாள் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கதவுகள் அலங்கரிக்கப்பட்டு இருப்பது

அழகர்கோவிலில் உள் பிரகாரத்திலேயே கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்

Published On 2021-08-09 07:23 GMT   |   Update On 2021-08-09 07:23 GMT
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி, வண்ண மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் இன்றி அரசு வழிகாட்டுதல்படி இந்த நிகழ்வுகள் நடந்தது.
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு வைகை ஆற்றின் கரையில் தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கம். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுக்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று தடையை மீறி மதுரை வைகை ஆற்றில் கல்பாலம், பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பதற்காக திரண்டனர். கல்பாலம் பகுதியில் பொதுமக்கள் ஓரளவுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆனால் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் ஏராளமானோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இருந்த போதிலும் சிலர் போலீசாரின் அறிவுரையை கேட்காமல் தர்ப்பணம் கொடுப்பதில் மும்முரமாக இருந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடி அமாவாசை விழா உள் பிரகரத்தில் நடந்தது. இதையொட்டி உள் பிரகாரத்திலேயே கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளினார். பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி, வண்ண மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சுவாமிக்கு சாத்தப்பட்டிருந்த மாலை பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சாத்தப்பட்டது. பக்தர்கள் இன்றி அரசு வழிகாட்டுதல்படி இந்த நிகழ்வுகள் நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News