ஆன்மிகம்
ராமேசுவரம் கோவில் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடந்தபோது எடுத்தபடம்.

அக்னி தீர்த்த கடற்கரைக்கு சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து

Published On 2021-08-09 12:30 IST   |   Update On 2021-08-09 12:30:00 IST
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாள் நிகழ்ச்சி யாக நேற்று ஆடி அமாவாசையையொட்டி காலை 9 மணி அளவில் அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து பகல் 11 மணி அளவில் ராமபிரான், சீதை லட்சுமணர், சுக்ரீவர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிவதீர்த்தம் எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு ராமர் சிலையுடன் குருக்கள் ஒருவர் தீர்த்தத்தில் இறங்கி நீராடி தீர்த்தவாரி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் ராமபிரானுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ராமபிரான் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் தங்க கருட வாகனத்தில் வைக்கப்பட்டு 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜையில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், பேஷ்கார் கமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ஆடி அமாவாசையான நேற்று தீர்த்தவாரி பூஜை மற்றும் ராமர் புறப்பாடு நிகழ்ச்சியும் கோவிலின் 3-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாவின் 9-வது நாளான இன்று நடைபெற இருந்த அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News