ஆன்மிகம்
கடற்கரை வெறிச்சோடி கிடந்ததையும், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததையும் படத்தில் காணலாம்.

பக்தர்களுக்கு தடை: ஆடி அமாவாசை நாளில் ராமேசுவரம், கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது

Published On 2021-08-09 02:42 GMT   |   Update On 2021-08-09 02:42 GMT
அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் அந்த வழியாக செல்லும் பாதைகளிலும் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆடி அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி, தர்ப்பணம் பூஜை செய்து வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பக்தர்கள் புனித நீராடுவதை தடுக்கும் வகையில் அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் அனைத்து பாதைகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டன. மேலும் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் அந்த வழியாக செல்லும் பாதைகளிலும் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஆடி அமாவாசையான நேற்று பக்தர்கள் புனித நீராடி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று கடற்கரைக்கு செல்லும் பாதைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், கடற்கரைக்கு செல்ல வந்த சுற்றுலா பயணிகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர். எனவே கன்னியாகுமரி கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, திருச்சி அம்மா மண்டபம் பகுதியும் தடையின் காரணமாக நேற்று வெறிச்சோடியது.
Tags:    

Similar News