ஆன்மிகம்
ராமேசுவரம் ராமநாதசாமி

ராமேசுவரம் கோவிலில் ஆடித்தேரோட்டம் ரத்து

Published On 2021-08-03 07:53 GMT   |   Update On 2021-08-03 08:05 GMT
ஆண்டுதோறும் ஆடித்தபசு அன்று நடைபெறும் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறுவது வழக்கம்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.

திருவிழாவின் முதல் நாளில் அம்மன் சன்னதி பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 11-ந்தேதி ஆடி தபசு வழிபாடும், 12-ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

அதுபோல் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் உள்ள காரணத்தால் இந்த ஆண்டும் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின்போது சாமி ரத வீதிகளில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறாது. அவை கோவிலில் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெறும் என்றும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்த ஆண்டு
தேரோட்டம்
நடைபெறாது என்பதுடன் திருவிழாவின் அனைத்து நாட்கள் நிகழ்ச்சியும் கோவிலின் உள் பகுதி மூன்றாம் பிரகாரத்திலேயே வைத்து நடைபெறும்.

மேலும் வழக்கமாக ஆண்டுதோறும் ஆடித்தபசு அன்று நடைபெறும் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டும் கோவிலின் உள்ளேயே வைத்து சாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதுபோல் திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக சாமி, அம்பாள் ராமர் பாதம் செல்லும் மண்டகப்படி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சியும் கோவிலின் உள்ளேயே நடைபெறுகின்றது.
Tags:    

Similar News