ஆன்மிகம்
ஆடி கிருத்திகையையொட்டி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த காட்சி.

பக்தர்கள் இன்றி திருப்பரங்குன்றத்தில் உள்திருவிழாவாக நடந்த ஆடிக்கிருத்திகை

Published On 2021-08-03 09:37 IST   |   Update On 2021-08-03 09:37:00 IST
கடந்த ஆண்டு, முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கோவிலுக்குள் உள்திருவிழாவாக ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆடி கிருத்திகையும் ஒன்று. இந்த திருவிழா ஆடி மாதத்தில் கார்த்திகை அன்று ஒரு நாள் மட்டும் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடிக்கிருத்திகைக்கு என்று சன்னதி தெருவில் கார்த்திகை மண்டபம் அமைந்துள்ளது. ஆடி கிருத்திகை அன்று கோவிலில் இருந்து ஆடி கார்த்திகை மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வலம் வந்து அருள்பாலிப்பார்.

பின்னர் அந்த மண்டபத்திலேயே இரவு வரை தங்கி இருப்பார். அன்று இரவு 7 மணி அளவில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இத்தகைய சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு, முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கோவிலுக்குள் உள்திருவிழாவாக ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது. அதேபோல இந்த ஆண்டும் 2-வது முறையாக ஆடி கிருத்திகை திருவிழா நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் இன்றி உள்திருவிழாவாக நடந்தது.

இதனையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரமும், மகா, தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து மேள, தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வந்தார்.

Similar News