ஆன்மிகம்
குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்

குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்

Published On 2021-07-27 08:22 GMT   |   Update On 2021-07-27 08:22 GMT
கர்ணன் முகத்தில் சோகப் புன்னகை படர்ந்தது. தாய் தன் மீதான பாசத்தில் வந்திருப்பதாக முதலில் நினைத்திருந்தான். ஆனால் அவள் கேட்ட வரங்களின் மூலம், அவள் பாண்டவர்களின் மீதான பாசத்தையும் தன்னோடு சுமந்து வந்திருப்பதை உணர்ந்தான்.
மகாபாரதத்தில் வரும் கர்ணன், தன் வாழ்நாள் முழுவதும் கொடுத்தே பழக்கப்பட்டவன். அவன் எவரிடமும் எதுவும் கேட்டுப் பெற்றது கிடையாது. போர்க்களத்தில் அம்பால் வீழ்த்தப்பட்டு, உயிர் எஞ்சியிருக்கும் தருணத்தில், அவனுக்கு மகாவிஷ்ணு தன்னுடைய விஸ்வரூப காட்சியைக் காட்டினார்.

அப்போதும் கூட அவன் இறைவனிடம் எதுவும் கேட்டுப்பெறவில்லை. இறைவனே “உனக்கு ஏதாவது வரம் கொடுக்க நினைக்கிறேன், கேள்” என்று சொன்னபிறகுதான், ஒரு கோரிக்கையை வைத்தான். அது, “உன் திருக்காட்சியைக் கண்டபிறகு எனக்கு இனி பிறப்பு இல்லை என்று நான் அறிவேன். ஒருவேளை நான் மீண்டும் பிறக்க நேர்ந்தால், அந்தப் பிறவியிலும் என்னிடம் ‘இது வேண்டும்’ என்று கேட்பவர்களுக்கு, ‘இல்லை’ என்று சொல்லாத மனதை தர வேண்டும்” என்று கேட்டான்.

அப்படிப்பட்ட கர்ணன், ஒரே ஒருவரிடம் மட்டும் ‘எனக்கு இதைத் தாருங்கள்’ என்று கேட்டுப் பெற்றான். அந்த நபர், கர்ணனின் தாய் குந்திதேவி.

கர்ணன் தன்னுடைய மகன் என்று தெரிந்ததும், அவனைப் பார்க்கச் சென்றாள், குந்தி. கர்ணனை ஆரத்தழுவி கண்ணீர் விட்டவள், அதன்பிறகு கண்ணன் சொன்னபடி கர்ணனிடம் இரண்டு வரங்களைப் பெற்றாள். ஒன்று, ‘அர்ச்சுனைத் தவிர பாண்டவர்களில் மற்றவர்களை கொல்லக்கூடாது’, மற்றொன்று, ‘அர்ச்சுனன் மீது விடும் நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் மறுமுறை விடக்கூடாது.’

கர்ணன் முகத்தில் சோகப் புன்னகை படர்ந்தது. தாய் தன் மீதான பாசத்தில் வந்திருப்பதாக முதலில் நினைத்திருந்தான். ஆனால் அவள் கேட்ட வரங்களின் மூலம், அவள் பாண்டவர்களின் மீதான பாசத்தையும் தன்னோடு சுமந்து வந்திருப்பதை உணர்ந்தான்.

தாய் கேட்ட வரங்களைக் கொடுத்துவிட்டான். அதுவரை யாரிடமும் எதுவும் கேட்டிராத கர்ணன், தன் தாயை நோக்கி, “தாயே எனக்கு இரண்டு வரங்களைத் தாருங்கள்” என்று கேட்டான்.

ஒன்று, “நான் உங்கள் மகன் என்பதை, பாண்டவர்களில் மற்றவர்களுக்கு இப்போது நீங்கள் சொல்லக்கூடாது. நான் அவர்களின் சகோதரன் என்று தெரிந்தால், அவர்கள் என்னோடு சண்டையிட தயக்கம் காட்டுவார்கள்.”

அடுத்த வரம், “நான் பிறந்தபோதும், வளர்ந்தபோதும் உன் மடியில் என்னை தாங்கிக்கொள்ள வில்லை. ஒரு வேளை நான் இந்தப் போரில் வீழ்ந்துபோனால், நீ போர்க்களம் வர வேண்டும். அங்கு வந்து, என்னை உன் மடியில் சாயத்துக் கொண்டு, நான் பிறந்த கதையையும், வளர்ந்த கதையையும், என் சிறப்பையும் சொல்லி அழ வேண்டும்.”

இரண்டு வரத்திற்குமே குந்தி சம்மதித்து விட்டாள். குருச்சேத்திரப் போரின் 17-வது நாளில் கர்ணன் இறந்து போனான். அப்போது போர்க்களத்திற்கு வந்த குந்தி, அவனை தன் மடியில் கிடத்தி, அவன் புகழ்பாடி அழுதாள். அப்போதுதான் முதன் முதலாக ‘ஒப்பாரி’ (இறந்தவரின் புகழைப் பாடி அழுவது) பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
Tags:    

Similar News