ஆன்மிகம்
அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தம்

நூபுரகங்கை தீர்த்தத்தில் புனித நீராட அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை

Published On 2021-07-27 10:41 IST   |   Update On 2021-07-27 13:20:00 IST
கங்கைக்கு நிகரான கருதப்படும் இந்த நூபுரகங்கை தீர்த்தத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அருகே கள்ளழகர் கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அழகர்மலை உச்சியில் நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது. ஆறாவது படைவீடு முருகப்பெருமானையும், கள்ளழகரையும், பதினெட்டாம்படி கருப்பணசாமியையும் பக்தர்கள் புனித தீர்த்தமாடி வந்து வணங்குவது வழக்கம்.

இந்த நூபுர கங்கை தீர்த்தமானது பல ஆயிரம் ஆண்டுகளாக மூலிகை மரங்களின் வேர்களை தழுவி வெளியில் எப்போதும் வருவதாக தெரிவிக்கின்றனர். புனித தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் உள்ளதால் இந்த நீரை பருகும் போது நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிகிறது. இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்படாமல் இருக்கும் நிலையில் பல திருவிழா நிகழ்வுகள் தடைபட்டுள்ளது.

புதிதாக கட்டப்படும் மனைகள் தொழில் தொடங்குபவர்கள் இந்த புனித தீர்த்தத்தை பிளாஸ்டிக் அல்லாத பாத்திரத்தில் எடுத்து செல்வார்கள். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்ட போதிலும் நூபுரகங்கையில் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் கங்கைக்கு நிகரான கருதப்படும் இந்த நூபுரகங்கை தீர்த்தத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News