ஆன்மிகம்
சங்கரநாராயண சுவாமி கோவில்

சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு காட்சி: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

Published On 2021-07-22 09:13 GMT   |   Update On 2021-07-22 09:13 GMT
சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் அந்தந்த மண்டகப்படியில் சுவாமி-அம்பாளுக்கு பூஜைகள் நடத்தாமல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் உள்பிரகாரத்திலேயே சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் அந்தந்த மண்டகபடிதாரர்கள் மட்டும் 50 பேர் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

விழாவின் சிகர நாளான ஆடித்தபசு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. வழக்கமாக தெற்கு ரத வீதியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெறும் ஆடித்தபசு காட்சி, தற்போது கோவிலுக்குள்ளேயே எளிமையாக நடத்தப்படுகிறது.

மாலை 6 மணியளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் இரவு 8 மணியளவில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்கசுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறார்.

இதில் இரு மண்டகபடி சமுதாயத்தைச் சேர்ந்த 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விழாவையொட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News