ஆன்மிகம்
திருமலை அருகே ஸ்ரீவாரி பாதத்தில் சத்ர ஸ்தாபனோற்சவம்

திருமலை அருகே ஸ்ரீவாரி பாதத்தில் சத்ர ஸ்தாபனோற்சவம்

Published On 2021-07-22 09:08 GMT   |   Update On 2021-07-22 09:08 GMT
ஸ்ரீவாரி பாதத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம், சிறப்புப்பூஜைகள் செய்து, குடை பிரதிஷ்டை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
திருமலையில் உள்ள 7 மலைகளில் மிக உயரமான மலை நாராயணகிரி மலை. திருமகளை தேடி வந்த சீனிவாசபெருமாள் நாராயணகிரி மலை சிகரத்தில் பாதம் பதித்த முதல் இடம் இதுவாகும். அங்கு, ஆடி மாதத்தில் காற்று அதிவேகமாக வீசும். அங்கு, குடையை பிரதிஷ்டை செய்ததும் அதிவேகமாக வீசும் ஆடி காற்று சற்று வேகத்தைக் குறைத்து சாந்தமாக வீசத் தொடங்கும்.

மேற்கண்ட நிகழ்வை நினைவுக்கூறும் வகையில் திருமலை அருகே நாராயணகிரி மலையில் நேற்று சத்ர ஸ்தாபனோற்சவம் (குடை பிரதிஷ்டை விழா) நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-வது மணி ஒலித்ததும் அர்ச்சகர்களும், ஊழியர்களும் பிரசாதம், மலர்கள், தங்கக் கிணற்றில் இருந்து புனிதநீா், பிரத்யேக குடை ஆகியவற்றை மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலின் நான்கு மாடவீதிகள் வழியாக நாராயணகிரி மலை சிகரத்தில் உள்ள ஸ்ரீவாரி பாதத்துக்கு எடுத்துச்சென்றனர்.

அங்கு, ஸ்ரீவாரி பாதத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம், சிறப்புப்பூஜைகள் செய்து, குடை பிரதிஷ்டை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அந்த நேரத்தில் வேதப் பண்டிதர்கள் வேதப் பாராயண சாத்துமுறை நடத்தினர். அங்கிருந்த பக்தர்களுக்கு நைவேத்திய பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திருமலையை அடைந்தனர்.
Tags:    

Similar News