ஆன்மிகம்
கோமதி அம்பாள் வெள்ளிச்சப்பரத்தில் உள்பிரகாரத்தில் வீதிஉலா வந்த போது எடுத்தபடம்.

ஆடித்தபசு திருவிழாவின் 9-வது நாள்: வெள்ளி சப்பரத்தில் அம்பாள் வீதி உலா

Published On 2021-07-22 05:49 GMT   |   Update On 2021-07-22 05:51 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம்12 நாட்கள் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெறும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம்12 நாட்கள் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெறும்.

வழக்கமாக 11 -ம் திருநாள் அன்று நடைபெறும் “ஆடித்தபசு  காட்சி” மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு  ஆடித்தபசு  திருவிழா கடந்த 13-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்றம் மற்றும் முக்கிய விழாக்களில் பங்கேற்க மண்டக படிதாரர்கள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி தினமும் காலை, இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

கொடியேற்றம் தொடங்கியது முதல் வருகிற 24-ந் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆடித்தபசு திருவிழாவின் 9-வது நாளான இன்று வழக்கமாக தேரோட்டம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை. மாறாக அம்பாள் கோவில் உள்பிரகாரத்தில் வீதிஉலா வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து.

அதன்படி இன்று காலை அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் கோமதி அம்பாள் கோவில் உள்பிரகாரங்களில் மட்டும் வீதி உலா வந்தார்.

இதில் கோவில் மண்டக படிதாரர்கள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

நாளை (வியாழக்கிழமை) 10-வது நாள் திருவிழாவில் கோமதி அம்பாள் கையில் மண்சட்டியில் முளைப்பாரி எடுத்து வெள்ளி சப்பரத்தில் உள்பிரகாரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மண்டகப்படிதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் அடையாள அட்டை வழங்கி உள்ளது. அவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

பிரசித்தி பெற்ற  ஆடித்தபசு காட்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News