ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபத்தின் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி

அருணாசலேஸ்வரர், அஷ்ட லிங்க கோவில்களில் வெளியிலேயே நின்று தரிசித்த பக்தர்கள்

Published On 2021-04-27 02:59 GMT   |   Update On 2021-04-27 02:59 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வழிபாட்டு தலங்கள் மூடப்படும் என அரசு அறிவித்ததையடுத்து அருணாசலேஸ்வரர், அஷ்டலிங்க கோவில்களில் பக்தர்கள் வெளியிலேயே நின்று தரிசித்து சென்றனர்.
கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை அதிகரித்து வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது.

அரசின் உத்தரவின் பேரில் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முகூர்த்த நாளாகும். இதனால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்லும் அம்மணி அம்மன் கோபுர வாசல், ராஜகோபுர வாசல் மற்றும் திருமஞ்சன கோபுர வாசல் ஆகியவை அடைக்கப்பட்டு காணப்பட்டது.

தினமும் உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு பின் தங்கள் பணியை தொடங்குவார்கள். கோவிலுக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் கோவிலின் ராஜகோபுர வாசல் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு நின்று சாமியை மனதில் நினைத்த படி கை கூப்பி வணங்கிவிட்டு செல்கின்றனர்.

கோவில் கோபுர வாசல்கள் அடைக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் கோவிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

இருப்பினும் கோவிலுக்குள் சாமிக்கு வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி அருணாசலேஸ்வரர் கோவிலின் சார்பு கோவில்களான கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள், சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில், சோமாசிபாடியில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் பக்தர்கள் வாசலிலேயே நின்று வணங்கி விட்டு சென்றனர்.
Tags:    

Similar News