ஆன்மிகம்
பசுஞ்சாணத்தால் செய்து வைக்கப்பட்டுள்ள லிங்கம். கீற்றுகளால் அமைக்கப்பட்ட லிங்கம்.

சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் 25 அடி உயரத்தில் தென்னங்கீற்றுகளால் சிவலிங்கம் அமைப்பு

Published On 2021-03-08 04:49 GMT   |   Update On 2021-03-08 04:49 GMT
நகரி மண்டலம் கீழப்பட்டு கிராமத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் 11-ந்தேதி மகாசிவராத்திரி விழா நடக்கிறது. அதையொட்டி 25 அடி உயரத்தில் தென்னங்கீற்றுகளால் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டம் நகரியை அடுத்த கீழப்பட்டு கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அஷ்டலட்சுமிகளால் பூஜிக்கப்பட்டதும், அஷ்ட நாகர்கள் மற்றும் பல முனிவர்களால் பூஜை செய்ததுமான திரிபுரசுந்தரி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரசித்திப் பெற்றதாகும்.

கோவிலின் தல விருட்சமாக வேம்பு, வில்வம் மற்றும் அரசமரம் உள்ளது. கோவில் அருகில் நாகதீர்த்தம் உள்ளது. ஐஸ்வர்ய தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் உள்ளது. இக்கோவில் சர்ப்ப தோஷ நிவாரணத் தலமாக திகழ்கிறது.

கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சிவலிங்கம் வடிவம் அமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.

அதேபோல் இந்த ஆண்டு தென்னங்கீற்றுகளால் 25 அடி உயரத்தில் பஞ்ச பூத லிங்கங்களுக்குள் பசுஞ்சாணத்தால் செய்த 1008 (சஹஸ்ர) லிங்கங்களும் மற்றும் 15 அடி உயரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேல் ருத்ராட்சங்களால் செய்த ருத்ர தாண்டவ சிவன் ருத்ராட்ச நந்தியும் உருவாக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விழாவான 11-ந்தேதி கோவிலில் 6 கால பூஜையும், மாலை உமா மகேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News