ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா ரத்து

Published On 2020-04-24 10:50 IST   |   Update On 2020-04-24 10:50:00 IST
திருநள்ளாறில் உள்ள உலக புகழ்பெற்ற சனீஸ்வரன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலக புகழ்பெற்ற சனீஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். சனீஸ்வரன் மற்றும் தர்பாரண்யேஸ்வரர் சாமி தேவஸ்தானத்தை சார்ந்த தர்பாரண்யேஸ்வரர் சாமி கோவில் மற்றும் அதன் உபகோவில்களான அய்யனார் கோவில், பிடாரி அம்மன் கோவில் மற்றும் சீதளாதேவி மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வருடாந்திர திருவிழாவான பிரம்மோற்சவ விழா, வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜூன் 5-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட கோவில் நிர்வாக அதிகாரியும், மாவட்ட துணை கலெக்டருமான ஆதர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் அனைத்து நிகழ்வுகளும் கோவில் சிவாச்சாரியர்கள், பூசாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் பங்களிப்புடன் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு பிரம்மோற்சவ விழாவை நடத்தினால், அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடும்.

எனவே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழா ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் சிவாச்சாரியார்களால் கோவிலில் உரிய பூஜைகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Similar News