ஆன்மிகம்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்திய காட்சி.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

Published On 2019-02-20 05:37 GMT   |   Update On 2019-02-20 05:37 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்காலை திருவிழாவை முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபாடு செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக புகழ்பெற்றது.

இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த பொங்காலை விழாவில் லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பெண் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஒரே இடத்தில் அதிக பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்திய வகையில் இந்த பொங்காலை திருவிழா 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை முக்கிய நிகழ்ச்சியான பொங் காலை திருவிழா நடந்தது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்பு உள்ள பெரிய பண்டார அடுப்பில் முதலில் தீ மூட்டப்பட்டது. காலை 10.15 மணிக்கு கோவில் தந்திரி வாசுதேவன் நம்பூதிரி பண்டார அடுப்பில் தீ வைத்ததும் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த அடுப்பில் பெண் பக்தர்கள் தீ மூட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

திருவனந்தபுரம் நகரின் முக்கிய வீதிகளில் ஏற்கனவே பொங்கல் அடுப்புகளுடன் இடம்பிடித்து இருந்த லட்சக்கணக்கான பெண் பக்தர்களும் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர்.

பொங்காலை திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பெண் கமாண்டோ போலீசாரும், பெண் போலீசாரும் கோவில் வளாகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
Tags:    

Similar News