ஆன்மிகம்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா 12-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-02-08 04:55 GMT   |   Update On 2019-02-08 04:55 GMT
பெண்களின் சபரிமலையான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா 12-ந்தேதி (செவ்வாய் கிழமை) தொடங்குகிறது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அறக்கட்டளை தலைவர் சசிதரன் நாயர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;-

பெண்களின் சபரிமலையான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் 25 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் ஒன்றுகூடி பொங்கலிட்டு கின்னஸ் சாதனை படைத்தனர்.இந்த ஆண்டு பொங்கல் விழா 12-ந் தேதி தொடங்குகிறது. அன்று இரவு 10.20 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி குடியமர்த்தி நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளி உணர்த்தல், நிர்மால்ய தரிசனம் உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 1 மணிக்கு நடை அடைக்கப்படும். விழாவையொட்டி சிறுவர்களுக்கான குத்தியோட்ட நேர்ச்சை வழிபாடு மற்றும் சிறுமிகளுக்கான தாலப்பொலி நேர்ச்சை நடக்கிறது.

குத்தியோட்ட சிறுவர்கள் 14-ந் தேதி முதல் தங்களது விரதத்தை மேற்கொள்வார்கள். குத்தியோட்ட விரதத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும். தாலப்பொலி நேர்ச்சையில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் கலந்து கொள்ளலாம். 9-ம் நாளன்று பொங்கல் வழிபாடு தினத்தில் அன்றைய தினம் இரவு மணக்காடு சாஸ்தா கோவில் நோக்கி அம்மன் பவனி நடக்கிறது.

பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு 20-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.15 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்கும். பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் நடக்கிறது. 21-ந் தேதி இரவு குருதி தர்ப்பனம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும்.

விழாவையொட்டி 12-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை நடிகர் மம்முட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் ஆற்றுக்கால் அம்பா விருது பத்மஸ்ரீ.எம்.ஆர் ராஜகோபாலுக்கு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News