ஆன்மிகம்

நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணி புஷ்கர விழா வழிபாட்டுக்கு தடை

Published On 2018-09-20 04:33 GMT   |   Update On 2018-09-20 04:33 GMT
நெல்லை குறுக்குத்துறை-தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி புஷ்கர விழா வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி அறிவித்துள்ளார்.
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் தாமிரபரணி புஷ்கர வழிபாடு மேற்கொள்வதற்கு கோவில்களுக்கு சொந்தமான மண்டபங்கள் மற்றும் படித்துறைகள், கோவில் வளாகங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புஷ்கர விழா நடத்த அதிகமான பக்தர்கள் செல்ல போதுமான பாதை வசதி இல்லை. அதிகமான பக்தர்கள் கூடுவதற்கு இடவசதியும் இல்லை. பருவமழைகாலத்தில் ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்லும்போது நீராடுபவர்களை பாதுகாப்பது சிரமம் என்றும், அந்த பகுதி நெரிசலான பகுதி என்பதால் அந்த இடத்தில் புஷ்கர விழா நடத்த இயலாது என்றும் கலெக்டர் தெரிவித்து உள்ளார். எனவே, அந்த இடத்தில் தாமிரபரணி புஷ்கர விழா வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள பிள்ளையன்கட்டளைக்கு சொந்தமான தைப்பூச மண்டபம் மற்றும் அந்த பகுதியில் உள்ள படித்துறைகள் மிகவும் பழமையானது ஆகும். அந்த பகுதியில் உள்ள ஆறு மிகவும் ஆழமானது என்பதாலும், நீர்ச்சுழல் உள்ள பகுதி என்பதாலும் அந்த இடத்திலும் புஷ்கர விழா வழிபாடு நடத்த அனுமதி கிடையாது. எனவே, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் மண்டபம் மற்றும் படித்துறைகளை புஷ்கர விழா வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி ஆன்மிக அமைப்புகளுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என கோவில் நிர்வாகிகளுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

புஷ்கர விழாவிற்காக கோவிலில் இருந்து சுவாமி எழுந்தருள செய்வது ஆகமவிதிகளுக்கு மாறானது ஆகும். எனவே கோவில்களில் தொன்று தொட்டு உள்ள பழக்க வழக்கத்திற்கு மாறாக சுவாமி எழுந்தருள செய்வது போன்றவை கூடாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

தாமிரபரணி புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி தொடங்கி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் இந்த விழா 18 இடங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையில் நடக்கிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கிறது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ளதால் அங்கு புஷ்கர விழாவிற்கு வந்து நீராடுபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதேபோல் தைப்பூச மண்டபம் மற்றும் அதன் அருகில் உள்ள படித்துறைகளிலும் ஆழம் அதிகமாக உள்ளதால் அங்கு குளிக்க வருகின்ற பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே இந்த 2 இடங்களில் மட்டும் புஷ்கர விழா வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது. மற்ற இடங்களில் வழக்கம்போல் புஷ்கர விழா நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News