ஆன்மிகம்

சுசீந்திரம் கோவிலில் ஆவணி திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-09-12 04:25 GMT   |   Update On 2018-09-12 04:25 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை தெப்பத்திருவிழாவும், மார்கழி பெருந்திருவிழாவும், மாசி திருக்கல்யாண திருவிழாவும் தாணுமாலயசாமிக்கு நடைபெறும்.

ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடக்கிறது. இந்த கோவிலில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன. சித்திரை மற்றும் மார்கழித் திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9.15 மணிக்கு மேல் திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்படும். கொடியை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ ஏற்றுகிறார். அதனைத்தொடர்ந்து கொடிபீடத்துக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தினமும் காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வருவர்.

9-ஆம் திருவிழாவான வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி இரண்டு அம்பாளையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க பக்தர்கள் இழுத்து வருவர்.

திருவிழா இறுதி நாளான 23-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவானுக்கு எண்ணெய்காப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும் பக்தர் சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News