ஆன்மிகம்
அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு வழங்குவதற்காக தங்க மீனை (அம்புகுறி) கடலில் விட்ட போது எடுத்த படம்.

அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா

Published On 2018-09-08 03:46 GMT   |   Update On 2018-09-08 03:46 GMT
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நாகை கடற்கரையில் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
நாகையில், நீலாயதாட்சியம்மன் காயரோகண சாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், தனி சன்னதியில் அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதிபத்த நாயனார், நுழைபாடி எனும் நம்பியார் நகரில், மீனவ சமுதாயத்தில் பிறந்தார்.

சிவ பக்தரான அவர். மீன்பிடி தொழில் செய்து வந்தார். அப்போது தான் பிடிக்கும் முதல் மீனை, சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவதை வழக்கமாக கொண்டு வந்தார். சிலநேரங்களில், கடலில் கிடைப்பது ஒரு மீனாக இருந்தாலும் அதையும் சிவபெருமானுக்கே கொடுத்து விட்டு வீட்டிற்கு வெறுங்கையுடன் செல்வார்.

இவரின் பக்தியை சோதிக்க வேண்டி சிவபெருமான், கடலில் தங்க மீன் ஒன்றை கிடைக்குமாறு செய்தார். அதிபத்தர், தனக்கு கிடைத்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே கொடுத்து விட்டு சென்றார். அவரின் எதிர்பார்ப்பு இல்லாத பக்தியை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அதிபத்தர் முன்பு காட்சி கொடுத்தார்.

இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நாகை புதிய கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவின்போது கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக நாகை புதிய கடற்கரைக்கு செல்வார். பின்னர் அதிபத்தர், சிவபெருமானுக்கு தங்க மீனை கொடுக்கும் உற்சவம் நடை பெறும். வழக்கம்போல் இந்த ஆண்டும் விழா ஆயில்ய நட்சத்திர நாளான நேற்று மாலை நடந்தது.

இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான், ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, ஊர்வலமாக சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்களுடன் நாகை புதிய கடற்கரைக்கு சென்றார். பின்னர் நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு ஆகிய மீனவ கிராமங்களின் சார்பில் அதிபத்த நாயனாருக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.

பின்னர் புதிய கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை மீனவர்கள் பைபர் படகில் ஏற்றி கொண்டு கடலுக்கு சென்றனர். பின்னர் வெள்ளி மற்றும் தங்க மீன் பிடிக்கும் காட்சியும், அதை அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு வழங்கும் காட்சியும் நடைபெற்றன. தொடர்ந்து சிவபெருமான் பார்வதி தேவியுடன் அதிபத்த நாயானாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பவுன்ராஜ் எம்.எல்.ஏ., நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், உதவி கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News