ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 11-ந்தேதி ஆடி அமாவாசை சிறப்பு பூஜை

Published On 2018-08-06 11:07 IST   |   Update On 2018-08-06 11:07:00 IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு அபிஷேகம், ஆடி களபபூஜை, ஸ்ரீபலிபூஜை, தீபாராதனை, உஷபூஜை, உச்சிகால பூஜை போன்றவைகள் நடைபெறுகிறது.

இந்த பூஜைகள் நடக்கும் போது பக்தர்கள் தரிசனத்துக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அதன்பிறகு 5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலின் பிரதான நுழைவுவாயில் திறக்கப்படுகிறது. ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படும். மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக 1 மணி வரை கோவில்நடை திறக்கப்பட்டு இருக்கும்.

அன்று இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும், வருடத்தில் 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் அன்றைய தினம் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடலில் புனிதநீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்மபூஜை, தர்ப்பணம் செய்வார்கள். பின்னர் பக்தர்கள் ஈரத்துணியுடன் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதிஅம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள்.

ஆடி அமாவாசை அன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவின் தென்பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக குவிவார்கள்.

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடம் தற்போது பக்தர்கள் புனித நீராட முடியாத அளவுக்கு காணப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி என்ற ஆழிபேரலையின் கோரத் தாண்டவத்தினால் இடிபாடுகளுக்கு உள்ளான கட்டிடங்களின் கற்களும், பாறாங்கற்களும் முக்கடல் சங்கம பகுதியில் குவிந்து கிடக்கின்றன. சுனாமி தாக்குதல் முடிந்து 13 ஆண்டுகள் கடந்த பின்பும் இந்த ராட்சத பாறாங்கற்கள் இதுவரை அகற்றப்பட வில்லை.

இதனால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட முடியாத அவலநிலை ஏற்பட்டு உள்ளது. அதையும் மீறி புனித நீராடும் பக்தர்களுக்கு கை, கால்களில் ரத்தக்காயம் ஏற்படும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

தற்போது ஆடி அமாவாசை நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்து கிடக்கும் பாறாங்கற்களை அகற்ற மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகியன இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News