ஆன்மிகம்
மாடியில் இருந்து மாங்கனிகளை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தியவர்களையும் படத்தில் காணலாம்.

மாங்கனித் திருவிழா - மாங்கனிகளை பக்தர்கள் வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

Published On 2018-06-28 08:52 IST   |   Update On 2018-06-28 08:52:00 IST
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவில் பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உண்டு. அவரை சிறப்பிக்கும் வகையில் ஆனி மாதம் வரும் பவுர்ணமி நாளில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித்திருவிழா 3 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா கடந்த 25-ந் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு கைலாசநாத கோவிலில் இருந்து பவளக்கால் விமானத்தில் பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா வந்தார்.

வீதிஉலாவின்போது சாலையின் இருபுறமும் உள்ள கட்டிடங்கள், வீடுகள், கடைகளின் மாடிகளில் இருந்தபடி மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த மாங்கனிகளை குழந்தைபேறு இல்லாதவர்கள் சாப்பிட்டால் அந்த ஆண்டே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


கைகளில் மாங்கனி ஏந்தியபடி காட்சி அளித்த பிச்சாண்டவ மூர்த்தி.

விழாவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அசனா, கீதா ஆனந்தன், முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கைலாசநாத கோவிலில் தொடங்கிய பிச்சாண்டவர் வீதி உலா பாரதி வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லேமர் வீதி வழியாக மாலையில் காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு பிச்சாண்டவர் வந்தார். பின்னர் இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு சித்தி விநாயகர் கோவிலில் பரமதத்தருக்கு 2-ம் திருமணம் நடந்தது. நள்ளிரவு 11 மணிக்கு புனிதவதியார் பு‌ஷ்ப பல்லகில் வீதிஉலா சென்றார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார்.
Tags:    

Similar News