ஆன்மிகம்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்

சகல ஐஸ்வர்யங்களையும் தரும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்

Published On 2021-08-11 06:05 GMT   |   Update On 2021-08-11 06:05 GMT
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாபம் நீக்கப்பெற்றதால் இக்கோவிலுக்கு ‘ஐராவதேஸ்வரர் கோவில்’ என்றும், இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது.
யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்று, தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சிற்பக் கலைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

இரண்டாம் ராஜராஜனால், 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் இது.

இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாபம் நீக்கப்பெற்றதால் இக்கோவிலுக்கு ‘ஐராவதேஸ்வரர் கோவில்’ என்றும், இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது.

தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயம் மற்றும் தாராபுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும், ‘அழியாத சோழர் பெருங்கோவில்கள்’ என்று வர்ணிக்கப்படுகின்றன.

மூலவரின் கருவறை விமானம், ஐந்துநிலை மாடங்களுடன் 80 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

இங்குள்ள யானை- காளை சிற்பம் பிரசித்திப்பெற்றது. யானையின் உடலை மறைத்தால் காளையின் உருவமும், காளையின் உடலை மறைத்தால் யானையின் உருவமும் தெரியும் வகையில், இரண்டு விலங்குகளுக்கும் ஒரே தலையை வடித்திருப்பது சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இங்குள்ள தூண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிறிதளவு கூட இடைவெளி இன்றி சிற்பங்களால் நிறைந்துள்ளன. நர்த்தனம் புரியும் கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம், வாத்தியக் காரர்களும், நாட்டியத்தின் முத்திரை காட்டும் பெண்களின் சிற்பங்களும் சில சென்டிமீட்டர் உயரமே கொண்டவை.

இறைவனின் கருவறைக்கு முன்பாக ராஜகம்பீரன் திருமண மண்டபம் என்னும் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தேர் சக்கரங்களோடு, ஒரு பக்கம் யானைகளாலும், மறு பக்கம் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் சிவாலயங்களில் மூலவரின் அருகிலேயே அம்மனுக்கு சன்னிதி இருக்கும். ஆனால் இங்கு அம்பாள் தெய்வநாயகியின் சன்னிதி, ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு வெளியே வலது புறம் அமைந்திருக்கிறது.

ஆலயத்திற்குள் நுழைந்ததும் நந்தியின் முன்பாக பலிபீடம் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த பலிபீடம் இது. இந்த படிகள், தட்டினால் ஒலி எழுப்பும் ‘இசைப்படிகள்’ ஆகும்.

சாபங்கள், பாவங்கள் போக்கும் தலமாகவும், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்.
Tags:    

Similar News