ஆன்மிகம்
ஓம் வடிவிலுள்ள ஓம்காரேஷ்வர் ஆலயம்

ஓம் வடிவிலுள்ள ஓம்காரேஷ்வர் ஆலயம்

Published On 2021-07-19 04:58 GMT   |   Update On 2021-07-19 04:58 GMT
இந்தத் தலத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவையே சாளக்கிராம கற்களாக மாறியதாக வரலாறு.
மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து 281 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓங்காரம். இங்கு ஓம்காரேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அமலேஸ்வரர் என்றும் இவரை அழைப்பார்கள். இது மலை முகட்டில் உள்ள சுயம்புலிங்கமாகும். இந்தத் தலத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவையே சாளக்கிராம கற்களாக மாறியதாக வரலாறு.

இங்கு ஜோதிர்லிங்கம் தோன்றக் காரணமான விந்திய மலை, முதலில் ஓம்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து, அதில் சிவலிங்கம் வைத்துப் பூஜித்ததால் இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது என்பர். மற்றும் ஒரு காரணம் கூறுகின்றனர். நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று கூடி, ஓங்காரத்தின் வரிவடிவம் போலக் காட்சி தருவதால், இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது எனவும் கூறுகின்றனர். கோயில் மூன்று அடுக்குகளாக உள்ளது. கீழ் தட்டில் ஓங்காரீசுவரரும், நடுத்தட்டில் மகாகாளரும், மூன்றாம் தட்டில் சித்தீசுவரரும் உள்ளனர். மூலஸ்தானத்தில் உள்ள ஓங்காரீசுவரர் மீது, கீழே இருபனைமர ஆழத்திலுள்ள நர்மதை ஆற்று நீர் மேலே வந்து தானே அபிஷேகம் ஆகிறது.

சிவபெருமானை மாந்தாதா வழிபட்ட தலம் ஓம்காரேஷ்வர். யாக வேள்விகளுடன் முக்கடவுள்களையும் மகிழ்வித்த மாந்தாதா பதிலுக்குப் பெற்றது சிவபெருமானின் இந்த ஓம்கார லிங்கத்துடன் தானும் வாசம் செய்யவேண்டும் என்பது மட்டுமே. ஓம்கார மாந்தாதா என்றே இந்தச் சிறு குன்று இன்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் குன்றை சிரத்தையுடன் பக்தர்கள் வலம் வருகின்றனர். பரிக்கிரமா என்ற கிரிப்பிரதட்சண வழியில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல அமைந்துள்ளன. ஓம்காரேஷ்வர் நர்மதையின் போக்கில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் அதிக புனிதமும் முக்கியத்துவம் பெற்றது  ஓம்காரேஷ்வரர் தீர்த்தம். முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் உறைந்திருக்கும் தலம் இது என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

நூற்றியெட்டு சிவலிங்கங்களைப் பெற்ற புண்ணியத் தலம். சிவபுரி, விஷ்ணுபுரி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. ஓம்காரேஷ்வர். சிவபுரியில் ஓம்காரேஷ்வர் எனவும், விஷ்ணுபுரியில் அமரேஸ்வர் (அல்லது மமல்லேஷ்வர்) எனவும் இறைவர் எழுந்தருளியுள்ளார். ஓம்காரேஷ்வர், மாந்தாதா என்ற திருநாமத்தாலேயே பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறார். நர்மதையும் காவேரி எனப்படும் அதன் துணை நதியும் சங்கமமாகும் இடம் ஓம்காரேஷ்வர். இரண்டு நதிகளும் அவற்றின் போக்கில் ஓம்காரா மாந்தாதா என்ற குன்றுள்ள தீவை ஏற்படுத்தி உள்ளன. குன்றும் இரு பாகங்களாகப் பிரிந்திருப்பதால் மேற்புறத்திலிருந்து நோக்கும்போது இத்தீவு ஓம் என்ற எழுத்தைப் பிரதிபலிக்கிறது. விந்திய மலை தன் வளர்ச்சிக்காக ஓம்காரேஷ்வரை வேண்டியது. தேவர்கள் பின்னர் வேண்டியதற்கு இணங்க இறைவர் ஓம்காரேஷ்வர், அமரேஸ்வர் இரண்டு லிங்கங்களாகப் பிரிகிறார்.

ஒரு முறை நாரதமுனி விந்திய மலைப் பகுதியில் சஞ்சரித்து விந்தியராஜனைக் காண்கின்றார். அவரைத் தொழுது வணங்கிய கிரிராஜன் சகல வளங்களுடன் மேன்மையையும் கீர்த்தியும் உடைய விந்திய பர்வதம் தாங்கள் வருகையால் மேலும் மேன்மை பெறுகிறது என கர்வமும் பெருமையும் பொங்க உரைக்கிறான். கிரிராஜனுக்கு ஆசி வழங்கிய நாரதர் பதிலுக்கு ஒரு பெருமூச்சை மட்டும் எழுப்புகிறார். துணுக்குற்ற விந்தியராஜன், என்ன நாரதரே, பெருமூச்சு விடுகிறீர்கள்? விந்திய பர்வதத்துக்கு என்ன குறை? என்று வினவுகிறான்.

அப்போது மேரு மலையின் சிகரங்கள் எப்படி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்திருக்கின்றன என்பதை நாரதர் விந்தியராஜனுக்கு விளக்குகிறார். எனவே, மேரு மலையின் உச்சத்தை விஞ்ச எண்ணிய விந்தியராஜன் ஓம்காரேஷ்வர் தலத்துக்கு வந்து மண் வடிவில் சிவலிங்கத்தை எழுப்பி கடுந்தவம் புரியலானான். ஆறு மாத காலம் இம்மியளவும் அசையாமல் கடும் தவம் இருந்த விந்தியராஜனின் பக்தியை மெச்சிய ஈஸ்வரன், கிரிராஜனுக்கு வேண்டிய வரத்தையும் அளிக்கிறார் (பின்னர் விந்திய மலையின் வளர்ச்சியை நிறுத்த அகஸ்தியர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்துவிட்டுத் தெற்கிலேயே தங்கிவிடுகிறார்).

விந்தியராஜனுக்கு வரமளிக்கத் தோன்றிய இறைவனை தேவர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் ஓம்காரேஷ்வரிலேயே நிலையாகத் தங்கும்படி இறைஞ்சுகின்றனர். அதுவரை பிரவண சொரூபமாய் ஒன்றாக இருந்த ஓம்கார் லிங்கம் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பாதி சதாசிவமாக ஓம்காரேஷ்வர் ஆகிறது. மறுபாதி மண் லிங்கத்துடன் ஜோதியாய்க் கலந்து அமரேஸ்வர் அல்லது மமலேஷ்வர் ஆகிறது. இவ்விரண்டும் ஓம்காரேஷ்வர் தீர்த்தத்தின் இருகரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. காவேரி என்கின்ற சிறிய நதி ஓம்காரேஷ்வர் அருகில் நர்மதையுடன் இணைகிறது. விசித்திரம் என்னவென்றால் அது நர்மதையை இரண்டு முறை சந்திக்கிறது. முதல் முறை அது நர்மதை நதியுடன் கலக்காமல் கடந்து செல்வதாக நம்பப்படுகிறது! மாந்தாதா குன்றை வலம் வந்த பின் காவேரி நர்மதையுடன் இணைகிறது எனக் கருதுவோரும் உண்டு.
Tags:    

Similar News