ஆன்மிகம்
வெள்ளீஸ்வரர் திருத்தலம்

கண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்

Published On 2020-10-20 01:27 GMT   |   Update On 2020-10-20 01:27 GMT
சுக்ரன் வழிபட்டு பேறுபெற்ற திருத்தலங்களில் முக்கியமானது, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்ற ஊரில் உள்ள வெள்ளீஸ்வரர் திருத்தலம் ஆகும்.
நவக்கிரகங்கள், இறைவனை வழிபட்டு சிறப்பு பெற்ற திருத்தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் முக்கியமானது அசுரர்களின் குருவாகவும், நவக்கிரகங்களில் குருவிற்குப் பிறகு வலிமை கொண்டவராகவும் விளங்கும் சுக்ரன் ஆவார். ‘சுக்ராச்சாரியார்’ என்பதையே சுருக்கமாக ‘சுக்ரன்’ என்று அழைக்கிறோம். இந்த சுக்ரன் வழிபட்டு பேறுபெற்ற திருத்தலங்களில் முக்கியமானது, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்ற ஊரில் உள்ள வெள்ளீஸ்வரர் திருத்தலம் ஆகும்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த இந்த திருத்தலத்தில் ‘வெள்ளீஸ்வரர்’ (பார்க்கவேஸ்வரர்) என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சி காமாட்சி அம்மனே அனைத்து சிவாலயங்களுக்கும் மூலவராக பாவிக்கப்படுவதால், இங்கு அம்மனின் பாதம் மட்டும் காணப்படுகிறது. தலவிருட்சமாக மாமரமும், தீர்த்தமாக சுக்ர தீர்த்தமும் உள்ளன. இந்த ஆலயத்தின் வரலாற்றை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அம்பாள், விளையாட்டாக சிவனின் கண்களை தன் கைகொண்டு மூடினாள். சந்திரனும், சூரியனுமே சிவபெருமானின் இரு கண்களாக இருப்பதால், அம்பாள் கண்களை மூடிய அந்த நொடியே இந்த உலகம் இருளில் மூழ்கிப்போனது. உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் ஆழ்ந்தன. இதனால் அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன், அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள்.

சிவபெருமானும் அம்பாள் மீது இரக்கம் கொண்டு, “நீ பூமியில் என்னை நினைத்து தவம் இருந்து வா.. நான் உரிய காலத்தில் உன்னை கயிலாயம் அழைத்து வருவேன்” என்று அருளினார். அதன்படி பூமியில் பிறந்த அம்பாள், இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தாள். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்ராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் மகாவிஷ்ணுவால் கண்களை இழந்து, அந்த கண்களைத் திரும்பப் பெறுவதற்காக இங்கே தவம் செய்துகொண்டிருந்தார்.

மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், தானம் கொடுக்க வேண்டாம் என்று மகாபலியை தடுத்தார். அதையும் மீறி நீர் இருக்கும் தாரை பாத்திரத்தை எடுத்து தானம் கொடுக்க முன்வந்தான், மகாபலி. அப்போது தாரை பாத்திரத்தின் நீர் வரும் பாதையை வண்டாக மாறி அமர்ந்து தடுத்தார், சுக்ராச்சாரியார். அதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து வண்டு இருக்கும் இடத்தில் குத்தினார். இதில் வண்டாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்பார்வை பறிபோனது. இழந்த கண்பார்வையை மீட்பதற்காகவே சுக்ராச்சாரியார், இத்தலத்தில் தவம் செய்துகொண்டிருந்தார்.

இத்தலத்தில் அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே, இங்கிருந்தபடியே அம்பிகையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்தில் தவம் செய்யும்படியும், அங்கு வந்து காட்சி தருவதாகவும் கூறினார். அதன்படி அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தன் தவத்தை தொடர்ந்து, சிவனருள் பெற்றாள். சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த சிவன் இத்தலத்தில் எழுந்தருளினார்.

இக்கோவிலில் சதுர பீடத்துடன் சிவலிங்கம் உள்ளது. கருவறைக்கு வெளியே துவாரபாலகர்கள் கிடையாது. சுக்ராச்சாரியாருக்கு ‘வெள்ளி’ என்றும் பெயருண்டு. எனவே அவருக்கு காட்சி கொடுத்த ஈசன், ‘வெள்ளீஸ்வரர்’ ஆனார். சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்பவர்கள், சன்னிதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

சென்னையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மாங்காடு திருத்தலம். சென்னையில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
Tags:    

Similar News