ஆன்மிகம்
ஊதிமலை உத்தண்ட வேலாயுதசுவாமி திருத்தலம்

ஊதிமலை உத்தண்ட வேலாயுதசுவாமி திருத்தலம்

Published On 2020-06-16 02:10 GMT   |   Update On 2020-06-16 02:10 GMT
பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கொங்கண சித்தர் தவம் இயற்றி முருகன் சிலை வடித்த தலம், திருப்புகழ் பாடல்பெற்ற தலம், இயற்கையான சூழலில் அரிய மூலிகைகள் கொண்ட மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம்.

ஊதியூர் என இவ்வூர் அறியப்பட்டாலும், இதன் பழமையான பெயர் ‘பொன்னூதி மலை’ ஆகும். காரணம், மேலைக்கொங்கு நாட்டினை ஆட்சி செய்த, உதியர்கள் குலச்சின்னமாக ‘உதி’ என்ற மரம் விளங்கியது. இம்மரத்திற்கு ஒதி, ஓதி என்ற பெயர்களும் உண்டு. மேலும், இந்த உதி மரத்தில் பூக்கும் பூக்கள், பொன்னிறமாய் மின்னுமாம். இம்மரங்கள், இம்மலைகளில் நிறைந்திருந்தன. அதனால் ‘பொன் ஒதி மலை’ என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. அதுவே மருவி ‘பொன்னூதி மலை’யானதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

போகரின் சீடரான கொங்கணச் சித்தர், தான் தவம் புரிய ஏற்ற இடத்தை தேடிய போது, இம்மலையைக் கண்டார். உடனே அவருக்கு இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பஞ்சபூத தலமாகவும், அரிய கற்கள், பாறைகள் நிறைந்த இடமாகவும் இது இவருக்கு புலப்பட்டது. இதனால் இம்மலையிலுள்ள, சந்திரகாந்தக் கல் தூணின் மீது அமர்ந்து தவம் இயற்றினார்.

கொங்கணர் இம்மலையில், வாழ்ந்தபோது, மக்களின் வறுமையை நீக்க விரும்பினார். மலையில் கிடைத்த அபூர்வ மூலிகைகளை கொண்டு, அவற்றை நெருப்பிலிட்டு, மண்குழல் கொண்டு ஊதி, அதைப் பொன்னாக்கினார். அதனால் இம்மலைக்கு ‘பொன்னூதி மலை’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சாலையில் இருந்து பார்க்கும்போது, அழகிய மலை மீது முருகன் ஆலயம் கண்ணுக்கு விருந்தாக தெரிகிறது. சுமார் 300 அடி உயரம்உள்ள இம்மலை 150 படிகளைக் கொண்டதாகும். அடிவாரத்தில், பாத விநாயகர், அனுமந்தராயர் சன்னிதிகள் உள்ளன. படியேறும்போது வழியில் உள்ள பாறையில் பழமையான விநாயகர் புடைப்புச்சிற்பமும், அதன் அருகில் இடும்பன் சன்னிதியும் உள்ளன. பொன்னூதி மலையின் நடுப்பகுதியில் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் நுழைவு வாசல் தென்புறம் அமைந்துள்ளது. கிழக்கில் ராஜகோபுரம் வாசலுடன் காணப்படுகிறது. கருவறையில், உத்தண்ட வேலாயுத சுவாமி, கிழக்கு நோக்கி ஐந்தடி உயரத்தில் காட்சி தருகின்றார். இவரின் கோலம் மேற்கு நோக்கிய பழனி ஆண்டவரை தரிசித்தவாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவரை கொங்கண சித்தர் உருவாக்கியதாக தலவரலாறு கூறுகிறது. இவருக்கு துணையாக விநாயகப் பெருமான் மற்றும் பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தில் பவுர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் காங்கேயம்-பழனி வழித்தடத்தில் காங்கேயத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், பழனியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து, வட்டமலை ஐந்து கிலோமீட்டர், சிவன்மலை 18 கிலோமீட்டர், சென்னிமலை 35 கிலோமீட்டர் என சில பழமையான ஆலயங்களும் உள்ளன.

கொங்கணச் சித்தர் ஆலயம்

பொன்னூதி மலையின் உச்சியில்கொங்கணர் ஆலயம் அமைந்துள்ளது. உத்தண்ட வேலாயுத சுவாமி ஆலயம் வழியாக, மூன்று கிலோமீட்டர் தொலைவு மலைமீது செல்ல வேண்டும். செட்டித்தம்பிரான் சித்தர் ஜீவசமாதி, உச்சிப்பிள்ளையார் கோவில், ஆகியவற்றைக் கடந்து செல்லும்போது கொங்கணர் சித்தர் ஆலயம் வருகின்றது. மற்றொரு எளிய வழியும் உள்ளது. இம்மலை அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதையில் ஏறினால், அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. இந்த வழியாக செல்பவர்கள் சந்திரகாந்தக்கல், அக்குபஞ்சர் பாறை, விஷமுறிவு பாறைகள் இவற்றை தரிசிக்க முடியும்.

பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது எளிய கொங்கணர் ஆலயம். கருவறையில் கொங்கணச் சித்தர் சந்திரகாந்த கல் மீது தவமியற்றும் கோலத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு 200 அடி தூரத்தில் கொங்கணர் தவம் இயற்றிய குகை ஒன்று உள்ளது. இக்குகையில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுகிறது. தியானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இங்கே தவம் செய்யும்போது தெய்வீக அனுபவத்தை உணரலாம்.

பவுர்ணமிக்கு முதல் நாள் தொடங்கி, நான்கு நாட்கள் சிறப்பு பூஜைகள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. குறையோடு வரும் பக்தர்களை இங்குள்ள விஷமுறிவு பாறையில் படுக்க வைத்து பரிகாரம் செய்யப்படுகின்றது.
Tags:    

Similar News