ஆன்மிகம்

தீராத நோய் தீர்க்கும் கொடிமலை முருகன் கோவில்

Published On 2019-06-01 01:43 GMT   |   Update On 2019-06-01 01:43 GMT
பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மலேசியா நாட்டின் முதன்மையான மலை வாசஸ்தலமாக விளங்கும் ஆலயம், குன்றக்குடி குமரனை நினைவுபடுத்தும் கொடிமலை முருகன், ஆடிக் கிருத்திகைக்கும், கந்தசஷ்டி விழாவிற்கும் புகழ்பெற்ற கோவில், புதுமையான கயிற்றிழுவை ரெயில் கொண்ட மலை, தமிழர்களின் அபிமான முருகன் தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில்.

ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் கால் பதித்து கெடாரம் கொண்ட பூமி. சோழ மன்னன் வென்ற கெடாரம், இன்று பினாங்கை அடுத்து ‘கெடா’ என்ற பகுதியாக அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழர்கள் குடியேற்றம் நடந்து, தமிழ் மக்கள் நிறைந்த தீவாக இந்தப் பகுதி விளங்கி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பூமி, மலேசியாவின் கவுரவமாகத் திகழும் மாநிலமாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும்.

ஆலய வரலாறு :

பல்லாண்டு காலமாக, இந்த மலையின் உச்சியில், முருகப்பெருமானின் ஆயுதமான வேல் ஒன்று நிறுவப்பட்டு, மலைவாழ் அடியவர்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இடத்தில், கோவில் கட்டிக்கொள்ள மலேசியா அரசு இடமளித்து அனுமதியும் வழங்கியது. 1971-ம் ஆண்டில் கொடை வள்ளலாகவும், தொழிலதிபராகவும் விளங்கிய மலேசியத் தமிழரான ஆறுமுகம் பிள்ளை என்பவரை தலைவராகக் கொண்டு, ஆதிமூலம் மற்றும் சிங்காரம் ஆகியோர் அடங்கிய குழுவினரால் எழிலான முருகன் கோவில் அமைக்கப்பட்டது. அந்த ஆலயம் கொடிமலை அருளொளி திருமுருகன் திருக்கோவிலாக இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

தொடர்ந்து 1988-ம் ஆண்டு அரசின் மானியத்துடன் சமுதாய கூடம் அமைக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோரது சிலை வடிவங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் வடிக்கப்பட்டு மலேசியா கொண்டு செல்லப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தல இறைவனான கொடிமலை முருகன், கிழக்கு முகமாய் வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானாக பன்னிரு கரங்கள் கொண்டு அருளாட்சி புரிகிறார். வடக்கு நோக்கிய அசுர மயில் மீது எழிலாக அமர்ந்து அருள் வழங்குகிறார். இந்த முருகப்பெருமானை முருகனை மத வேறுபாடின்றி அனைத்து மதத்தவரும் வழிபட்டுச் செல்வது, இவரின் அருளாற்றலை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை, கார்த்திகை, சஷ்டி திதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவை தவிர, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, வரலட்சுமி நோன்பு, கார்த்திகை தீபம் உள்ளிட்ட விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடிக்கிருத்திகை விழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதேபோல, கந்தசஷ்டி விழாவும் ஏழு நாட்கள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

இத்தலம் குன்றக்குடி குமரனின் தலத்திற்கு இணையாகத் திகழ்வதாக, இங்கு வந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் உளமாரப் பாராட்டியுள்ளார். தீராத நோய் உள்ளவர்களுக்கு இங்கே தீர்வு கிடைப்பதாக, இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

பினாங்கு தீவின் பெருமைமிக்க இடமாகத் திகழ்வது, பினாங்கு மலை. இதனைத் தமிழர்கள் ‘கொடிமலை’ என்று அழைக்கின்றனர். ராணுவத்தின் கொடி, இந்த மலை மீது ஏற்றப்பட்ட காரணத்தால், இதனை கொடிமலை என்று அழைப்பதாக கூறப்படுகிறது. மலேசிய நாட்டின் முதலாவது மலை வாசஸ்தலமாக விளங்கும் பெருமை பெற்றது, இந்த மலை.

மாநிலத் தலைநகரான ஜார்ஜ் டவுனில் இருந்து மேற்கே 9 கிலோ மீட்டர் தொலைவில், பினாங்கு மலை அமைந்திருக்கிறது. இந்த மலையின் உயரம் 2,733 அடி ஆகும்.

பிரான்சிஸ் லைட் என்பவர் இந்த மலையையும், இதன் சிறப்பையும் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தினார். இந்த மலையில் அருளொளி முருகன் கோவில், புத்தர் கோவில், மூலிகைப் பூங்கா, பயணிகள் தங்கும் விடுதிகள் என பல உள்ளன. இம் மலையின் தட்பவெப்பம் மற்றும் இழுவை ரெயில் போன்றவை அனைவரையும் கவர்ந்திழுப்பதாக இருக்கிறது.

கொடிமலை ரெயில் :

ஆயர் ஈத்தாம் அடிவாரத்தில் இருந்து, 6550 நீளத்திற்கு கயிற்று இழுவை ரெயில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில் நடைபயணமாகவும், குதிரைகள் மீது ஏறியும், முடியாத நபர்களை டோலியின் மீது அமர வைத்தும் மலையேறி வந்தனர். கி.பி. 1897-ம் ஆண்டு இருப்புப்பாதை போடும் திட்டம் உருவானது. 1906-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 1923-ம் ஆண்டு அந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தது. அந்த ஆண்டில் இருந்து கயிற்று இழுவை ரெயில், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது மீண்டும் 2010-ம் ஆண்டு நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் உருமாறியிருக்கிறது.

பனையபுரம் அதியமான்
Tags:    

Similar News