ஆன்மிகம்

சுக்ராச்சாரியாருக்கு கண் பார்வை அளித்த வெள்ளீஸ்வரர் கோவில்

Published On 2019-05-07 07:18 GMT   |   Update On 2019-05-07 07:18 GMT
சென்னை, மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது, காமாட்சி சமேத வெள்ளீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை, மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது, காமாட்சி சமேத வெள்ளீஸ்வரர் ஆலயம். பழமை வாய்ந்த இந்த ஆலயம், மயிலாப்பூரைச் சுற்றி அமைந்துள்ள சப்த ஸ்தான சிவாலயங்களில் மூன்றாவதாக கருதப்படுகிறது.

மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகமும், தானமும் செய்தார். அதனால் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சிய இந்திரன், திருமாலிடம் வேண்டினான். இதையடுத்து வாமன அவதாரம் எடுத்த திருமால், மகாபலியிடம் வந்து மூன்றடி மண் தானமாக கேட்டார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், மகாபலியை தானம் கொடுக்க விடாமல் தடுக்க முயன்றார்.

ஆனால் அதையும் மீறி மகாபலி தானம் செய்ய கமண்டல நீரை எடுத்தார். அப்போது சுக்ராச்சாரியார், வண்டு உருவம் எடுத்து கமண்டலத்திற்குள் சென்று, நீர் வரும் பாதையை அடைத்தார். இதையறிந்த திருமால், தர்ப்பை புல் ஒன்றை எடுத்து நீர் வரும் பாதையை குத்தி விட, அதில் சுக்ராச்சாரியாரின் ஒரு கண் பார்வை பறிபோனது.

இழந்த கண் பார்வை திரும்ப கிடைப்பதற்காக, சிவபெருமானை வேண்டி தவம் செய்தார், சுக்ராச்சாரியார். குருந்த மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபனம் செய்து அவர் தவம் செய்த இடம் தற்போதைய மயிலாப்பூர் ஆகும். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், சுக்ராச்சாரியாருக்கு கண் பார்வையை மீண்டும் வழங்கி அருள்புரிந்தார். அந்த இடத்தில் தான் தற்போது வெள்ளீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. உள்ளே தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் சித்தி, புத்தி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அவருக்கு முன்பாக தென்கூர் செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

கிழக்கு நோக்கியபடி இருக்கும் கரு வறையில் வெள்ளீஸ்வரர் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். நாகாபரண அலங்காரத்தில் சிவபெருமானை தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். சிவபெருமான் சன்னிதி எதிரே நந்தியம் பெருமான் தனி மண்டபத்தில் அருள்கிறார். நந்திக்கு பின்பாக கொடிமரம், பிரம்ம சக்தி பீடம் உள்ளது. கருவறை நுழைவு வாசல் முன்பு இருபுறங் களிலும் விநாயகர், முருகப்பெருமான் இருக்கிறார்கள்.

சிவபெருமான் சன்னிதிக்கு வலது புறத்தில், தெற்கு நோக்கிய திசையில் தனிச் சன்னிதியில் காமாட்சி அம்மன் எழுந்தருளியுள்ளார். நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருளும் இந்த அம்மன், மேல் இரு கரங்களில் மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறாா். அம்பாளின் கருவறையில் உள்ள ஸ்ரீசக்கரம், காஞ்சி சங்கராச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சுவாமியின் கருவறை கோஷ்டத்தில் மகா கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், கோமுகியில் சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். அதற்கு அடுத்ததாக துர்க்கையம்மன் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். உள் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், சிவசூரியன், சப்த கன்னியர், வீரபத்திரர், உண்ணாமுலையம்மனுடன் அண்ணாமலையார், சரஸ்வதி, லட்சுமி, சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்பட மேலும் பல தெய்வங்களின் திருமேனிகள் உள்ளன.

ஆலயத்தின் தென்மேற்கு பகுதியில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். இந்த சன்னிதியின் முன்பாக கொடி மரம், பலிபீடம் இருக்கிறது. சன்னிதியின் முன்பாக அருணகிரிநாதர், வீரபாகு ஆகியோர் இரு பக்கங்களிலும் உள்ளனா். முத்துக்குமார சுவாமி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். மேல் இரு கரங்களில் வேல், சேவல்கொடி தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார்.

இந்தச் சன்னிதியில் நேர் எதிரே, சிவாகாமி சமேத நடராஜர் அருள்கிறார். உள் பிரகாரத்தில் இருந்து வெளியே வருகையில் பைரவரை தரிசனம் செய்யலாம். வெளிப்பிரகாரத்தில் சுக்ரேஸ்வரர் தனிச் சன்னிதியில் இருக்கிறார். குருந்த மரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை, நின்றபடி வழிபடும் சுக்ராச்சாரியாரின் சிலை உருவத்தையும் நாம் காண முடியும்.

இவ்வாலயத்தில் விசாலமான கல்மண்டபம் உள்ளது. இதில் தான் விழாக் காலங்களில் எம்பெருமான் மற்றும் உபய உற்சவ விக்கிரகங்கள் வீதி உலா காணும் முன் அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த மண்டபத்தின் வெளியில் உள்ள தூணில் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தாற்போல் சரபேஸ்வரர் சன்னிதி உள்ளது. அதன் எதிரே சனீஸ்வரர் அருள்கிறார். நவக்கிரகங்களும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சம் குருந்த மரம் ஆகும்.

வழிபாட்டு பலன்கள் :

* சுக்ரேஸ்வரர் சன்னிதியில் மன முருக வேண்டிக் கொண்டு, அங்குள்ள கல்வெட்டில் உள்ள பதிகங்களைப் பாடினால் கண் பார்வை குறைபாடுகள் நீங்குவதாக பலனடைந்தவர்கள் கூறு கின்றனர்.

* நினைத்த காரியம் நிறைவேறவும், மனக்குறைகள் நீங்கவும், திருமணம் நடக்கவும் காமாட்சி அம்மனை வேண்டி பலனடைகின்றனர்.

* செல்வம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியை வழிபடுகின்றனர்.

* எதிரிகளின் தொல்லை, பயம் அகலவும், காரிய சித்தி பெறவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குகின்றனர்.

* ஏழரைச் சனியில் இருந்து நிவாரணம் பெற ஒவ்வொரு சனிக்கிழமையும் நெய் அல்லது எள் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி சனீஸ்வரரை வழிபடு கிறார்கள்.

* காரியத்தடை நீங்க, வேலை வாய்ப்புப் பெற, வெளிநாட்டில் வேலை கிடைக்க ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுகின்றனர்.

* குடும்பத் தகராறு நீங்கவும், வழக்கில் வெற்றி பெறவும், இழந்த செல்வத்தை மீட்கவும் வராகி அம்மனை தொழுகின்றனர்.

சரபேஸ்வரர் சன்னிதி :

இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், நரசிம்மரின் உக்கிரம் அடங்கவில்லை. அவரது உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு, சிவபெருமான், சரபம் என்னும் பட்சியாக உருவம் கொண்டார். ‘சரபம்’ என்பதற்கு ‘சிங்கத்தை அடக்கக் கூடிய எண்கால் பறவை’ என்று பொருள். எட்டுக் கால்களும், இரண்டு பெரிய இறக்கைகளும், சிங்க முகமும், நீண்ட மூக்கும், நரியின் வாலும் கொண்ட பட்சியாக உருவெடுத்த சிவபெருமான், தன்னுடைய எட்டு கால்களாலும், நரசிம்மரைப் பற்றி, அலகுகளால் கிழித்து, அவரது தோலை உரித்து நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் சொல்கின்றன.

இந்த சரபேஸ்வரருக்கு, வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனிச் சன்னிதி இருக்கிறது. இவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) சிறப்பான அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடக்கின்றன. இந்தச் சன்னிதியின் வெளியே வலது புறம் பிரத்யங்கிரா தேவியும், இடதுபுறம் சூலினி துர்க்கையும் அருள்கிறார்கள்.

தினமும் ஆறுகால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
Tags:    

Similar News