ஆன்மிகம்
108 திவ்ய தேசம்

108 திவ்ய தேசங்களும் எங்கிருக்கிறது என்பதை சொல்லும் பாடல்

Published On 2021-10-30 07:04 GMT   |   Update On 2021-10-30 07:04 GMT
திவ்யதேசங்கள் அனைத்தையும், ஆழ்வார்கள் தங்கள் பாடல்களால் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்பவர் பாடிய ஒரு பாடல், 108 திவ்ய தேசங்களும் எங்கிருக்கிறது என்ற கணக்கைச் சொல்வதாக இருக்கிறது.
திருமால் வீற்றிருக்கும் 108 திருத்தலங்கள், ‘திவ்ய தேசங்கள்’ என்று பெருமைப்படுத்தப்படுகின்றன. ஒரு முறை வைகுண்டத்தில் இருந்த பெருமாளிடம், பிரம்மதேவன் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

“பெருமாளே.. தற்போது தாங்கள் வீற்றிருக்கும் இந்த வைகுண்டம் தவிர, வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?” என்றார், பிரம்மன்.

அதற்கு “ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச” என்று பதிலளித்தார், திருமால். ‘ஸதம்’ என்றால் ‘நூறு’ என்றும், ‘ஸப்த’ என்றால் ‘ஏழு’ என்றும் பொருள். அதன்படி வைகுண்டம் தவிர மேலும் 107 இடங்களில் பெருமாள் வாசம் செய்கிறார். அவையே 108 திவ்ய தேசங்கள். இந்த திவ்யதேசங்கள் அனைத்தையும், ஆழ்வார்கள் தங்கள் பாடல்களால் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்பவர் பாடிய ஒரு பாடல், 108 திவ்ய தேசங்களும் எங்கிருக்கிறது என்ற கணக்கைச் சொல்வதாக இருக்கிறது.

அந்தப் பாடல்:-

ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி

ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் - சீர்நாடு

ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு

கூறு திருநாடொன்றாக் கொள்”

பொருள்:- சோழ நாட்டில் 40 ஆலயங்கள், பாண்டிய நாட்டில் 18, மலைநாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வட நாட்டில் 12, திருநாடு என்னும் வைகுண்டம் ஒன்று. ஆக மொத்தம் 108.

108 திவ்ய தேசங்களிலும், திருமால் நின்ற, கிடந்த, இருந்த என்ற மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். அதன்படி 60 திவ்ய தேசங்களில் நின்ற கோலத்திலும், அதற்கு அடுத்த படியாக 27 திருத்தலங்களில் கிடந்த (சயனம்) கோலத்திலும், 21 திருக்கோவில்களில் இருந்த (அமர்ந்தபடி) கோலத்திலும் அருள்பாலிக்கிறார்.

மேற்கண்ட 108 திவ்ய தேசங்களில், 79 திவ்ய தேசங்கள் கிழக்கு திசை நோக்கியும், 19 திவ்ய தேசங்கள் மேற்கு திசை நோக்கியும், 7 திவ்யதேசங்கள் தெற்கு திசை நோக்கியும், 3 திவ்ய தேசங்கள் வடக்கு திசை நோக்கியும் அமைந்துள்ளது.
Tags:    

Similar News