ஆன்மிகம்
அங்கயற்கண்ணி அம்மன்

அங்கயற்கண்ணி அம்மன் மாலை

Published On 2020-07-03 06:40 GMT   |   Update On 2020-07-03 06:40 GMT
அங்கயற்கண்ணி அம்மனுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக நீங்கும்.
சீறுதரு மூடர்கடஞ் சேவைகளே செய்தொழுகிப்
பேறுதரு நின்னருளைப் பேணேனை யாள்குவையோ
கூறுதரு குறட்கன்னக் குழியினொடு வையையெனும்
ஆறுதரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [1]

குன்றுவரு கொங்கையுடைக் கோதையர்கள் மேனிதொறும்
சென்றுவரு தீமைமிகு சிந்தையனை யாள்குவையோ
கன்றுவரு மானணிகைக் கண்ணுதலா லெழுகடலும்
அன்றுவரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [2]

உண்ண லுடுத்த லுறங்கன் முதலியவே
நண்ணலுறு மிக்கொடிய நாயேனை யாள்குவையோ
விண்ணடைந்தாங் கின்பநுகர் வீரன்மல யத்துவச
அண்ணல்வரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [3]

குன்றுவளை மலர்க்கரத்துக் கோவையுநின் னையுமதியா
தின்றுவளைக் கரமடவார்க் கிரங்குமெனை யாள்குவையோ
சென்றுவளை புகழ்மிகுமோர் செழியனிந் திரன்முடிமேல்
அன்றுவளை யெறிகூடல் அங்கயற்க ணாயகியே. [4]

கடித்தவெயி றுடைச்செங்கோற் காலன்றண் டனைகருதா
தொடித்தவற வினைமிகவு முடையேனை யாள்குவையோ
கடித்தபொழில் மேருவினைக் கைச்செண்டி னுக்கிரன்முன்
அடித்தபெரும் பொழிற்கூடல் அங்கயற்க ணாயகியே. [5]

வெங்கணர்கண் டீவினையே விழைந்துன்சந் நிதியணுகா
திங்கணுக ரறக்கடைசெய் திருப்பேனை யாள்குவையோ
எங்கணரு ளெனுமுனிவர்க் கீரிருவே தப்பொருளை
அங்கணனா ரருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [6]

குயிலோ கிளியோவிக் கோதையர்கள் மாற்றமென்று
மயலே மிகுத்துழலிவ் வஞ்சகனை யாள்குவையோ
வெயிலாரும் பூணணிகள் மேவுக் கிரவரசா
அயிலோன் வருகூடல் அங்கயற்க ணாயகியே. [7]

இன்பினொடு நின்பெருமை யெண்ணியொழு குதலின்றித்
துன்பினொடு நாளகற்றுந் துன்மதியை யாள்குவையோ
வன்பினொடு மெம்பெருமான் வளைசெண்டு வேலொருசேய்க்
கன்பினொடு மருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [8]

வெயில்விடுத்த செம்மேனி விமலனொடு நினைநினைப்போர்ப்
பயில்விடுத்த முழுமூடப் பாதகனை யாள்குவையோ
மயில்விடுத்த வுக்கிரனாம் வழுதியலை கடல்சுவற
அயில்விடுத்த திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [9]

முக்காலங் களுமுணரும் மூதறிஞர் தமைச்சார்தல்
எக்கால மெனநினையா திருப்பேனை யாள்குவையோ
நக்கால நுகர்ந்தபிரா னவமணியி னியலமைச்சர்க்
கக்காலம் பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [10]

வெம்புபசி பிணிதாகம் வெவ்வறுமை யடைந்துன்னை
நம்புதலி லாதுழலு நாயேனை யாள்குவையோ
பம்புதிரைக் கடலதனைப் பசுபதிவே ணியினுறுநான்
கம்புதமார் தருகூடல் அங்கயற்க ணாயகியே. [11]

பாகியலு மொழிமடவார்ப் பற்றிநினைப் பற்றாது
போகியபுல் லருக்கரசாம் புன்மையனை யாள்குவையோ
வாகியல்விண் மழைதடுக்க மழைமுகில்கள் நான்மாடம்
ஆகியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [12]

பாடியலுந் தமிழ்நூல்கள் பலபடித்து மறிவின்றி
வாடியநெஞ் சகமுடைய மாண்பிலியை யாள்குவையோ
தேடியமா றனக்கரியர் சித்தரென வந்தெல்லாம்
ஆடியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [13]

தேனையுறழ் சுவைமிகுத்த செய்யுளினின் றனைத்துதியா
தேனையதி பாதகனை யீனனைநன் காள்குவையோ
மானையணி மலர்க்கரத்து வள்ளலார் கழையினைக்கல்
லானையுணப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [14]

குன்றெய்து கொங்கையுடைக் கோதையர்கட் காளாகி
இன்றெய்தும் பழியினனா யிருப்பேனை யாள்குவையோ
மன்றெய்து நடமுடையார் வல்லமணர் விடுகளிற்றை
அன்றெய்து செறுகூடல் அங்கயற்க ணாயகியே. [15]

மருத்தகுழன் மடவார்கள் வாஞ்சைமரீஇ மனமலையும்
ஒருத்தனைக்கா சினிச்சுமையா வுற்றேனை யாள்குவையோ
விருத்தன்முதல் மூன்றுருவ மேவியருட் பரனாடும்
அருத்தியுறு வளக்கூடல் அங்கயற்க ணாயகியே. [16]

வாடிமன மயங்காதுன் மலர்ப்பதத்தை யின்கவியாற்
பாடிநிதங் களித்திடுமா பயிற்றியெனை யாள்குவையோ
தேடிவரு புகழரச சேகரற்குப் பரன்மாறி
ஆடியருள் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [17]

வெஞ்சினக்கூற் றுவன்புரியும் வெந்தண்டம் மருவாதுன்
கஞ்சமலர்ச் சேவடியைக் கருதேனை யாள்குவையோ
நஞ்சினழ குறுகளத்து நம்பனொரு பெண்பழிக்கா
அஞ்சினவான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [18]

நீண்டவிழி மங்கையரை நேசித்து நினைவணங்கா
தீண்டவறக் கடைபுரிந்தே யிழிந்தேனை யாள்குவையோ
மாண்டதிருத் தந்தைதனை மாய்த்தனையைப் புணர்ந்தோனை
ஆண்டருளுந் திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [19]

துங்கமுறு குருவடியைத் தொழலின்றி நாள்கழியாப்
பங்கமுறு பழிமிகுத்த பதகனையு மாள்குவையோ
புங்கமுறு குருமனையைப் போற்றாது விழைந்தோன்றன்
அங்கமறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [20]

இரவைநிகர் குழல்வாட்க ணேந்திழையார் தமைவிழைந்தே
உரவையகன் றலக்கணுறீஇ யொழியேனை யாள்குவையோ
பரவையமண் பதகர்விறற் பாண்டியன்மேல் விடுத்தவிட
அரவையறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [21]

பாவையுரைத் துனதுமலர்ப் பதம்பணித லொழிந்திந்த
நாவைவறி தேசுமக்கும் நாயேனை யாள்குவையோ
கோவைவெறுத் தேயமணக் கொடியர்விடுத் திடவந்த
ஆவையொழித் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [22]

குழைத்த மனமுமலர் கொண்டு குவிகையும்
இழைத்த அருச்சனையு மில்லேனை யாள்குவையோ
தழைத்த படையைச் சவுந்தரசா மந்தனுக்கா
அழைத்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [23]

இளித்த செயலு மிழிவுடையோர்ச் சேர்ந்து
களித்த மனமுமுடைக் கள்வனையு மாள்குவையோ
ஒளித்த நிதிய முலவாக் கிழியொருவற்
களித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [24]

இடைந்த செயலுநனி யேக்கறவும் புல்லருக்
குடைந்த மனமு முடையேனை யாள்குவையோ
மிடைந்த வளைகடமை மெய்ப்பர மன்வீதி
அடைந்து பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [25]

பொருளும் மனையும் புதல்வரும் மெய்யென்று
மருளுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ
தெருளுமட வார்க்கட்ட சித்தி களைப்பெம்மான்
அருளுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [26]

படையாள் விழியவரைப் பார்த்துருகி நின்னை
உடையா ளெனமதியா துற்றேனை யாள்குவையோ
நடையாள் வளவனுக்கு நாத னருளிவிடை
அடையாளஞ் செய்கூடல் அங்கயற்க ணாயகியே. [27]

கருத்து மொழியுமிந்தக் காயமும் வேறாகி
இருத்துந் துயர்க்கிடமா மீனனையு மாள்குவையோ
செருத்துன் படைபடைக்குத் தேவன் புனல்வைத்
தருத்தும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [28]

பாற்றுங் கொடுமை படைத்தே யறவழியை
மாற்றுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ
போற்றுந் தெரிவை பொருட்டமலன் செம்பொன்மிக
ஆற்றுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [29]

பாழ்த்த புறச்சமயப் பாழை யடைந்துபிறர்
தாழ்த்த வருந்தும் தமியேனை யாள்குவையோ
காழ்த்த பகையுடைய காவலனைப் பாம்புரியில்
ஆழ்த்தும் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [30]

பலவா தனைமருவிப் பற்றிகந்து நெஞ்சம்
சுலவா வுழலுமிந்தத் துட்டனையு மாள்குவையோ
உலவாநெற் கோட்டை யொருவற் கொருவனருள்
அலையார் புனற்கூடல் அங்கயற்க ணாயகியே. [31]

காமனென்ன வீனர்தமைக் கட்டுரைத்து மிக்குழலும்
தீமனத்த னாய சிறியனையு மாள்குவையோ
மாமனென வந்து வழக்குரைத்த வேணியிடை
ஆமணிவோன் மணிக்கூடல் அங்கயற்க ணாயகியே. [32]

மருளார் மனத்துன் மலரடியைப் பேணா
திருளார் குழுவோ டிணங்குமெனை யாள்குவையோ
தெருளார் வரகுணர்க்குச் சிவலோகங் காட்டியோர்
அருளாளர் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [33]

சித்திர மென்னத் திகழ்மடவார்க் காளாகிக்
குத்திர மேய கொடியேனை யாள்குவையோ
பத்திரற்கு வீணை பரிந்தே பகைவெலுமால்
அத்திரர்வாழ் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [34]

நேரலர்கட் கஞ்சியுனை நிமிடப் பொழுதேனும்
ஓரலனாய்த் தீமைமிக வுற்றேனை யாள்குவையோ
சேரலன்பாற் செல்லத் திருமுகம்பா ணர்க்கருளி
ஆரணிகோ வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [35]

நையமன நின்றனுரு நாடிப் பணிந்துதுதித்
துய்ய வறியா துழல்வேனை யாள்குவையோ
செய்யமனப் பாணர்க்குச் சேர்மழையிற் பொற்பலகை
ஐயனிடு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [36]

வசையாருந் தீய வழிமருவி நின்பால்
நசையாது மின்றியுறை நாயேனை யாள்குவையோ
இசைவாது வெல்லவோ ரேழைக் கருள்செய்
தசையா னுறைகூடல் அங்கயற்க ணாயகியே. [37]

உன்னை யுனதருளை யுன்னா தனுதினமும்
தன்னை மதித்துத் தருக்குமெனை யாள்குவையோ
மன்னை வுறச்செய்த வன்றிக் குருளைகளுக்
கன்னையனை யான்கூடல் அங்கயற்க ணாயகியே. [38]

தேக்கிய வின்பவழி தேராது துன்பவழி
ஆக்கிய வொப்பரிய வற்பனையு மாள்குவையோ
பாக்கிய வேனப் பறழ்களை மந்திரியா
ஆக்கிய கூடனகர் அங்கயற்க ணாயகியே. [39]

நின்னாம மென்று நியம முறச்செபியா
துன்னா ரருளைவிழை வுற்றேனை யாள்குவையோ
கொன்னாருங் காரிக் குருவிக் கருள்புரிந்த
அன்னான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [40]

காரை யுறழ்கரத்தா யென்று கசடர்கடம்
பேரை யியம்பியலை பேதையனை யாள்குவையோ
நாரை யுறமுத்தி நல்கி யருள்புரிந்த
ஆரையணி வார்கூடல் அங்கயற்க ணாயகியே. [41]

பாலவாய் மேவுதமிழ்ப் பாக்களினுன் றாள்பரவா
தேலவா யோதியரை யேத்துமெனை யாள்குவையோ
சாலவா யொருவழுதி தான்காணப் பாம்புசுலாய்
ஆலவா யாங்கூடல் அங்கயற்க ணாயகியே. [42]

வம்பெய்து கொங்கை மடவாரைப் போற்றியுனை
நம்பெய்த லில்லாத நாயினையு மாள்குவையோ
கும்பெய்து தானையுடைக் கோனஞ்சச் சுந்தரப்பேர்
அம்பெய்த கோன்கூடல் அங்கயற்க ணாயகியே. [43]

தேன்றோய் சுவைத்தமிழைத் தெள்ளித் தௌியாது
மான்றோய் விழியால் மயங்குமெனை யாள்குவையோ
ஏன்றோ ருயர்ந்தோ ரிழிந்தோ ரெனும்பலகை
ஆன்றோர்க் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [44]

களித்த வுளமுங் கசடர்தமைச் சொல்வாயும்
ஒளித்த நடையு முடையேனை யாள்குவையோ
தளித்ததொடைப் பெம்மான் றருமிக்குப் பொற்கிழியன்
றளித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [45]

சித்தநா வுடல்நின்பாற் செலுத்திவழி படலின்றி
மத்தனாய்த் திரிந்திடுமிம் மாண்பிலியை யாள்குவையோ
கத்தனார் கீரனைநீர்க் கரையேற்றி யாண்டருளும்
அத்தனா ருறைகூடல் அங்கயற்க ணாயகியே. [46]

இகத்தியலும் வழியிதுவென் றெண்ணாம லின்பனைத்தும்
உகத்தியங்கி நாள்கழிக்க லுற்றேனை யாள்குவையோ
மிகத்தியங்கு கீரனுக்கு விமலரரு ளாலியலைந்
தகத்தியனார் நவில்கூடல் அங்கயற்க ணாயகியே. [47]

துங்கத்தார் நின்கோயில் தொண்டுசெயா துட்டருக்கிப்
பங்கத்தார்க் காளாமிப் பாவியினை யாள்குவையோ
சங்கத்தார் மாறு தணித்தே யராவணிந்த
அங்கத்தார் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [48]

இணங்குமற வாற்றினிடை யேகாத மூடர்
கணங்குழுமி நிற்பாடக் கல்லேனை யாள்குவையோ
பிணங்குமிடைக் காடனுளப் பேதகற்றி ஆண்டவனோ
டணங்கரசாய்க் கூடல்வளர் அங்கயற்க ணாயகியே. [49]

மலைவீசு முத்தே மயிலே மரகதமே
உலைவீசு பொன்னேயென் றோதேனை யாள்குவையோ
வலைவீசி முன்ன மணந்தபெரு மானுயிரே
அலைவீசு நீர்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [50]

கந்தடருங் களியானைக் காவலனே யெனச்சிதடன்
முந்தணவித் துதித்தலையும் முழுமகனை யாள்குவையோ
மந்தணத்தைப் பெருந்துறையின் மாணிக்க வாசகப்பேர்
அந்தணருக் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [51]

நயமாக்குஞ் செஞ்சுவைப்பா நான்கினையு மூடர்கடம்
வயமாக்கி மிகவருந்திம் மாண்பிலியை யாள்குவையோ
சயமாக்கும் பரசணிந்த சம்புமுனஞ் சம்புவினை
அயமாக்கும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [52]

குன்றோடு வல்லிரும்பாங் குணமருவி யெவ்விடத்தும்
சென்றோடுஞ் சிந்தையுடைச் சிறியனையு மாள்குவையோ
மன்றோடு மன்பர்மனம் வாழ்பரமன் பரிநரியா
அன்றோடப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [53]

எண்சுமந்த செந்தமிழை எண்ணிஎண்ணித் துன்பமரீஇப்
புண்சுமந்த நெஞ்சமுடைப் புல்லியனை யாள்குவையோ
மண்சுமந்து பின்னர் வடுச்சுமந்த மாதேவன்
அண்சுமந்த கூடனகர் அங்கயற்க ணாயகியே. [54]

பரசிற் சுகமருணின் பாதம் பணிந்துன்பால்
விரசற் குளந்துணியா வீணனைநீ யாள்குவையோ
வரசண் பையர்தலைவர் வந்தே சுரந்தீர்த்
தரசற் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [55]

துளிக்குஞ் சுவைத்தமிழைச் சொல்லித் துதியாதே
களிக்கும் பயனறியாக் கள்வனை நீ யாள்குவையோ
தௌிக்கு மறைச்சிறுவர் தீச்சமணை மாற்றி
அளிக்குந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [56]

மறம்பயனாக் கொண்டசில மானிடரைப் போற்றித்
திறம்புமதி பாதகனாந் தீயனைநீ யாள்குவையோ
புறம்பயத்துச் சான்றாம் பொருளை யழைத்த
அறம்பயனார் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [57]

வம்போடு நெஞ்சு மழையோடு கண்களுமாய்த்
துன்போடு பாவாற் றுதிக்குமெனை யாள்குவையோ
.............................மெல்லோரும் பூசையுவந்
................................................ [58]
Tags:    

Similar News