ஆன்மிகம்
நடராஜர்

குறையின்றி நிறைவான வாழ்வு தரும் நடராஜர் ஸ்லோகம்

Published On 2020-02-01 06:08 GMT   |   Update On 2020-02-01 06:08 GMT
இந்தத் தில்லை அம்பல நடராஜனைப் பலவாறு வர்ணித்து, விவரித்து, விளக்கி முனுசுவாமி முதலியார் இயற்றிய நடராஜ பத்து ஸ்லோகங்களில் ஒன்றான இதை, பாடி குறையொன்றுமில்லாமல் நிறைவான செல்வத்துடன் வாழ்வோம்.
மானாட மழுவாட மதியாடப் புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாடத் திரையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாடக்
குண்டல மிரண்டாடத் தண்டைபுலியுடையாடக் குழந்தை முருகேசனாட
ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதினெட்டு முனியாட பாலகருமாட
நரைதும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

- நடராஜப் பத்து.

பொதுப்பொருள்: சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும்.

மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், ‘சிதம்பர ரகசியம்’ எனப்படுகிறது. இந்தத் தில்லை அம்பல நடராஜனைப் பலவாறு வர்ணித்து, விவரித்து, விளக்கி முனுசுவாமி முதலியார் இயற்றிய நடராஜ பத்து ஸ்லோகங்களில் ஒன்றான இதை, பாடி குறையொன்றுமில்லாமல் நிறைவான செல்வத்துடன் வாழ்வோம்.
Tags:    

Similar News