முக்கிய விரதங்கள்

எந்தெந்த கிழமைகளில் விரதம் இருந்தால் எப்படியான பலன்கள் கிடைக்கும்...

Published On 2022-09-19 08:25 GMT   |   Update On 2022-09-19 08:25 GMT
  • புதன் கிழமையில் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.
  • சனிக்கிழமையில் விரதம் இருந்தால் வருமானம் பன்மடங்கு உயரும்.

உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகளும், தீய சக்திகளும் அழிய நம் முன்னோர்கள் காலம் காலமாக விரதம் என்கிற ஒன்றை கடைபிடித்து வந்தனர்.விரதம் என்னென்ன நாளில்? இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருக்க நீண்ட நாள் பிணிகள் அனைத்தும் தீரும் என்கிறது சாஸ்திரம். நீண்ட நாளாக ஏதாவது ஒரு நோயால் நீங்கள் அவதிப்பட்டு கொண்டிருந்தால் அந்த நோய் விரைவாக தீர ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து பாருங்கள். ஒரு சில வாரம் இருந்தாலே உங்களுடைய அந்த நோய்க்கான தீர்வு கிடைப்பது போன்று உங்களுக்கே தோன்றிவிடும். நீண்ட கால நோயிலிருந்து மீண்டு ஆரோக்கிய வாழ்வைப் பெற ஞாயிறு விரதம் மேற்கொள்ளுங்கள்.

திங்கட்கிழமை: திங்கட் கிழமைகளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்கிறது சாஸ்திரம். நம் ஆன்றோர்கள் உடைய வாக்கின்படி திங்கட் கிழமையில் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்வது குடும்பத்தில் ஒற்றுமையையும், அமைதியையும் கொடுக்கும். ஒரு குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஒருவர் இருந்தால் கூட அந்த குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் அதனுடைய பலனில் பங்கு போய் சேரும்.

செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க் கிழமையில் விரதம் இருந்தால் கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீரும். கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பிறக்கும். எத்தகைய உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

புதன்கிழமை: புதன் கிழமையில் விரதம் இருந்தால் கலை, கல்வி போன்ற விஷயங்களில் சாதகமான பலன்களை பெறலாம். கலை, கல்வி தாகம் கொண்டவர்கள் புதன் கிழமை தோறும் விரதமிருந்து இறை வழிபாடுகளை மேற்கொண்டால் அதில் நிச்சயமாக சிறந்த எதிர்காலத்தை அடைய முடியும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க புதன் கிழமையில் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.

வியாழன் கிழமை: வியாழன் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. தம்பதியர்களாக வியாழன் கிழமை தோறும் விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வணங்கி வழிபட்டு இருந்து வந்தால் சந்தான பாக்கியம், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை: வெள்ளிக் கிழமையில் விரதமிருந்து எத்தகைய தெய்வத்தை வணங்கி வந்தாலும் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாஸ்திர நம்பிக்கையாக இருந்து வருகிறது. தம்பதியர்கள் ஒற்றுமையாக நீண்ட காலம் வாழ்ந்து ஆயுள் பலம் பெற வெள்ளிக் கிழமை தோறும் இருவருமாக விரதமிருந்து இறை வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

சனிக்கிழமை: சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வருமான விருத்தி உண்டாகும். தொழில், வேலை, வியாபாரம் என்று எத்தகைய விஷயங்களில் நீங்கள் வெற்றி பெற விரும்பினாலும், சிறப்புற விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் ஒவ்வொரு சனிக் கிழமையும் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கிழமையில் விரதம் இருந்தால் வருமானம் பன்மடங்கு உயர்ந்து செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News