தமிழ்நாடு செய்திகள்

கே.எஸ்.அழகிரியை மாற்றக்கோரி மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-25 14:03 IST   |   Update On 2023-11-25 15:49:00 IST
  • வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்
  • காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார்.

நெல்லை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளார்.

இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர், இந்திராகாந்தி சிலை முன்பு 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு சேலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கட்சி அலுவலகம் வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மாநில இணைச்செயலாளர் கமலா கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டபோதும் எங்களை அவமதிக்கும் நோக்கில் மாநில தலைவரும், கிழக்கு மாவட்ட தலைவரும் ஈடுபட்டு வருகிறார்கள். பாராளுமன்ற தொகுதிக்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்று உள்ளது.

மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் எந்த ஒரு ஆலோசனைகளையும் பெறாமல் இதுபோன்ற சம்பவங்களில் கிழக்கு மாவட்ட தலைவர் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார்.

எனவே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோரை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News