முக்கிய விரதங்கள்

இன்று சவுபாக்கிய கவுரி விரதம் அனுஷ்டித்தால் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் தடை நீங்கி நடக்கும்...

Update: 2023-03-24 03:15 GMT
  • வெள்ளிக்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய தினமாக கொண்டாடப்படுகிறது.
  • பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறைவான வாழ்வு வாழ்வதே சவுபாக்கியம் எனப்படும்.

அத்தகைய நிறைவான வாழ்வு வரம் தரும் சவுபாக்கியத்தை பெற பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இந்த விரதத்துக்கு சவுபாக்கிய கவுரி விரதம் என்று பெயர்.

பங்குனி மாத வளர்பிறை திருதியை சவுபாக்கிய கவுரி விரதம் என்று அழைப்பார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) இந்த சிறப்பான தினம் வருகிறது. அம்பாளை கொண்டாடுகின்ற இந்த விரதத்தை மிக எளிமையான பூஜையின் மூலம் கொண்டாடலாம். சிலர் ஒரு மாத காலம் கொண்டாடுவார்கள்.

அடுத்து வரும் திருதியை முதல் அட்சய திருதியை வரை கலசத்தை ஆவாகனம் செய்து தினந்தோறும் அம்பாளை பூஜை செய்வதன் மூலமாக பற்பல சவுபாக்கியங்கள் பெறலாம்.

இந்த விரதத்தால், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் எல்லாம் தடை நீங்கி நடக்கும். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோவிலில் தாயாருக்கும், சிவாலயத்தில் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்து வரலாம்.

கவுரி என்பது அம்பாளை குறிக்கும் ஒரு சொல்லாகும். உலக மக்களுக்கு தாயாக இருந்தாலும் அவள் கன்னியாகவே பாவிக்கப்படுகிறாள். ஆகவே இவளை வழிபடுபவர்களுக்கு கேட்ட வரம் கேட்ட படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. மரங்களில் புன்னை மரம் என்பது இயற்கை அளித்த அருட்கொடையாகும். புன்னை மரத்தில் அதிக மலர்கள் பூத்துக் குலுங்குவதை வைத்து அந்த காலத்தில் மழை பொழிவை தீர்மானித்து வந்ததாகவும் சான்றுகள் உள்ளன.

புன்னை மரத்திற்கு அடியில் அம்பாளை வைத்து சர்க்கரை பொங்கல் நிவேதனம் படைத்து மரத்தை சுற்றிலும் 108 முறை வலம் வந்து வணங்கினால் வேண்டிய வரமெல்லாம் கிடைக்குமாம். ஆனால் புன்னை மரத்திற்கு நாம் எங்கு செல்வது? புன்னை மரம் தெரிந்தவர்கள் இப்படி செய்யலாம். அப்படி புன்னை மரத்தை வைத்து வழிபட முடியாதவர்கள் புன்னை மர பூக்களை கொண்டு தாராளமாக வழிபடலாம்.

புன்னையில் கவுரி வசிக்கின்றாள். பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய தினமாக கொண்டாடப்படுகிறது. எந்த கிழமையில் நாம் விளக்கேற்றா விட்டாலும் வெள்ளிக்கிழமையில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விடுவது உண்டு. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாளாக இருப்பதால் அன்றைய நாள் இறை வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அம்பாள் ஆகிய கவுரியை இந்தப் பூவை வைத்து வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் கேட்ட வரம் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கவுரி விரதத்தில் அன்னையை சவுபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபட வேண்டும். தட்சனின் மகளான சதி தேவி இவ்விரதத்தின் பயனால் சிவனாரை மணந்தாள்.

சவுபாக்கிய கவுரி விரதம் சவுபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.

விரத தினத்தில் அதிகாலை நீராடி முறையாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி சிவப்பு வஸ்திரத்தால் அலங்கரிக்க வேண்டும்.

மங்கல பொருட்கள் என சொல்லப்படும் பதினாறு வகை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருமணி, மர சீப்பு, கண்மை, மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜையை காலை அல்லது மாலை செய்யலாம்.

முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவகிரகங்களை வணங்க வேண்டும். பின்னர் சிவன் பார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன் , தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் யாரேனும் இருவருக்கு உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

Tags:    

Similar News