முக்கிய விரதங்கள்

சாவித்திரி தேவி கடைபிடித்த மங்கள வாழ்வு தரும் காரடையான் நோன்பு

Published On 2023-03-11 08:13 GMT   |   Update On 2023-03-11 08:13 GMT
  • மதிக்குள் மதியாகி, மதியில் ஒளி கொடுத்தவள் அம்பிகை பராசக்தி.
  • சாவித்திரியானவள், அம்பிகைக்குத் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வகையில் செய்த நோன்பு இது.

சாவித்திரி என்னும் பெண்ணின் கதை நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோமா?

மத்ர தேசத்து மன்னர் அச்வபதி. இவருடைய மனைவி மாலதி (மாளவி என்றும் சொல்வதுண்டு). மிகச் சிறந்த தர்மவான்களாகத் திகழ்ந்த இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. சாவித்திரி என்னும் பிரம்மவித்யா தேவியை வழிபட்டால், மகப்பேறு கிட்டும் என்ற நம்பிக்கையில், இருவருமே சாவித்திரி ஆராதனை செய்தனர். அச்வபதிக்குக் காட்சி கொடுத்த சாவித்திரி மாதா, 'அரசே, தாங்களோ மகன் வேண்டுமென்று யாசிக்கிறீர்கள்; தங்கள் மனைவியோ, பெண் குழந்தை வேண்டுமென்று பூஜிக்கிறாள். இருவரின் ஆசையும் நிறைவேறும்' என்று கூறிவிட்டுச் சென்றாள். சில நாட்களிலேயே மாலதி கருவுற, குறித்த பருவத்தில் பெண் குழந்தையும் பிறந்தது.

பேரழகு வடிவமாகத் திகழ்ந்த மகளுக்கு சாவித்திரி மாதாவின் பெயரையே சூட்டினர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சாவித்திரி வளர்ந்தாள். கல்வி வேள்விகளில் சிறந்தவளாக, புலமை மிக்கவளாக, அறச் சிந்தை கொண்டவளாக, அப்பழுக்கு சொல்லமுடியாத இளவரசியாக வளர்ந்தாள். தூய்மையும் பேரழகும் பேராற்றலும் வாய்ந்த இவளுக்கு மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் வந்தது. இவளை நெருங்கவோ அணுகவோ அரசர்களும் இளவரசர்களும் தயங்கினர். இவளின் அறிவாற்றலே அனைவரையும் அணுகவிடாமல் தடுத்தது. மகளின் திருமணத்திற்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்த தந்தை, மகளின் திறமைமீது நம்பிக்கை வைத்து, இவளையே மாப்பிள்ளை தேடிக் கொள்ளவும் சொல்லிவிட்டார். தோழிமார்களுடன் அவ்வப்போது கானகப் பகுதிகளுக்குச் செல்லும் வழக்கம் உடைய சாவித்திரி, காட்டிலேயே வாழ்ந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவனைக் கண்டாள்; காதல் கொண்டாள்.

அவனையே மணப்பதாகத் தந்தையிடம் தெரிவித்தாள். அந்த இளைஞன் யார் என்பதை அறியச் செய்தபோது, மகிழ்ச்சியுடன் கூடிய அதிர்ச்சிதான் அச்வபதிக்குக் காத்திருந்தது. சாளுவ நாட்டு அரசர் தியுமத்சேனரின் மகன் தான் அந்த இளைஞன்; சத்தியவான் என்று பெயர். பகைவர்களின் வஞ்சத்தால் நாட்டைவிட்டு விரட்டப்பட்டு, இடையில் கண் பார்வையும் இழந்துவிட்ட பெற்றோர்களைப் பராமரித்துக் கொண்டு கானகத்தில் வசித்தவன்.

நல்லவன்; பெற்றோரைப் பாதுகாக்கும் அறிவினன்; ஆடம்பரங்கள் இல்லாத அடக்க சீலன் – இவற்றையெல்லாம் அறிந்துகொண்ட அச்வபதியும் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

திரிலோக சஞ்சாரியான நாரதர், திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மத்ர நாட்டை அடைந்தார். எல்லோரையும் ஆசீர்வதித்தவர், அச்வபதியைத் தனிமையில் அழைத்தார். எந்த நாளில் சாவித்திரியைத் தேர்ந்தெடுத்தாளோ, அந்த நாளிலிருந்து சரியாக ஓராண்டில் மறையக்கூடிய விதியைச் சத்தியவான் கொண்டிருக்கிறான் என்னும் உண்மையைத் தெரிவித்தார். விதி வலிதாயிற்றே!

அச்வபதியும் மாலதியும் கலங்க, சாவித்திரியோ தன்னுடைய முடிவில் உறுதியாக நின்றாள். திருமணமான மறுநாள்; தந்தையின் ராஜபோகத்தில் திளைக்காமல், கணவனோடும் மாமனார்-மாமியாரோடும் கானகம் சென்றாள் சாவித்திரி. கானக வாழ்க்கையைக் களிப்போடு ஏற்றாள்.

காலச் சக்கரம் சுழன்றது. சத்தியவானின் விதி முடிகிற தறுவாய் நெருங்கியது. கடைசி மூன்று நாட்கள், உண்ணாமல் உபவாசமிருந்து, உறங்காமலும் அம்பிகையை வழிபட்டு நோன்பு நோற்றாள். காரணத்தைக் கணவனிடமும் கூறவில்லை. ஏதோ விரதம் என்பதாக மட்டுமே சொன்னாள்.

குறித்த நாளும் வந்தது. சத்தியவான் மரம் வெட்டுவதற்காகப் புறப்பட்டான். ஏதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு, சாவித்திரி தானும் உடன் சென்றாள். மரம் வெட்டிக் கொண்டிருந்த சத்தியவான், திடுமென்று கீழே சரிய, மடியில் தாங்கினாள். பாசக் கயிற்றோடு யமன் வருவதைக் கண்டவள், சத்தியவான் உயிரை இழுத்துக் கொண்டு யமன் நடந்த போது, தானும் உடன் நடந்தாள். யாரென்று யமன் வினவ, ஏழடி உடன் நடந்துவிட்டதால், தான் யமனுக்கு நண்பர் ஆகிவிட்டதாக உணர்த்தி, உரையாடலைத் தொடங்கினாள்.

தன்னுடைய வாக்குச் சாதுர்யத்தால், யமனிடமே உபதேசம் கேட்டாள். அம்பிகையைத் துதித்துக் கொண்டே உரையாடலில் ஈடுபட்டவள், தன்னுடைய வாக்கு வன்மையால், மூன்று வரங்களையும் சம்பாதித்துக் கொண்டாள். முதல் வரத்தால், மாமனாருக்குக் கண் பார்வையையும் இழந்த நாட்டின் மீட்சியையும் பெற்றாள். இரண்டாவது வரத்தால், தன்னுடைய தந்தைக்கு நூறு புதல்வர்களைப் பெற்றாள். கடைசி வரத்தால், தனக்கு நூறு மகன்களைக் கேட்டாள். யமன் விழித்துக் கொண்டான். இந்த வரம், சத்தியவானின் உயிரைக் கொடுத்துவிடும் என்பதால் தயங்கினான். இருந்தாலும் புத்திசாலிப் பெண்ணின் பொறுமைக்கும் திறமைக்கும் தலை வணங்கி, வரத்தை மாற்றிக் கேட்கச் சொன்னான். சற்றே யோசித்தாள். அம்பிகையை தியானித்தாள். தியுமத்சேனரின் வம்சாவளி, சத்தியவான் வழியாகத் தொடரவேண்டும் என்று வேண்டினாள்.

'தந்தேன்' என்ற யமன், வார்த்தைகள் வெளியே விழுந்த பின்னர்தான், தான் வெல்லப்பட்டுவிட்டதை உணர்ந்தான். வெட்கப்பட்டான். இருந்தாலும் வாக்கு கொடுத்தது கொடுத்ததுதானே! விதியை சாவித்திரி மதியால் வென்றாள். மதிக்குள் மதியாகி, மதியில் ஒளி கொடுத்தவள் அம்பிகை பராசக்தி.

சத்தியவானைக் கைகளைப் பற்றிக் கொண்டு சாவித்திரி ஆசிரமம் திரும்பியபோது, பகைவர்களும் நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள், பெண்ணொருத்தி வந்து அவர்களை விரட்டினாள் (அம்பிகைதான், வேறு யார்?) என்னும் தகவல்களோடு அமைச்சர்களும் வந்தனர்.

மூன்று நாட்கள் உபவாசம் இருந்திருந்த சாவித்திரி, கார் அரிசியின் மாவை எடுத்து, வெல்லமும் காராமணியும் கலந்து, சின்னச் சின்ன அடைகளாகத் தட்டி, வெந்தெடுத்து, அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்தாள். கார் அரிசி அடை என்பதால், இதற்குக் காரடையான் நோன்பு என்னும் பெயரும் தோன்றியது. வெல்லத்திற்கு மாற்றாக, உப்பு கலந்து உப்படையும் செய்வதுண்டு.

பங்குனி மாதப் பிறப்பன்று, மாதம் பிறக்கிற தருணத்தில் (அதாவது, மாசியும் பங்குனியும் தொட்டுக் கொள்கிற தருணத்தில்), இந்த நோன்பைக் கடைப்பிடிப்பது வழக்கம். சூரியனுடைய கதிர்கள், பங்குனி மாதத்தில், மீன ராசியில் சஞ்சரிக்கின்றன.

எனவே, இந்த மாதத்திற்கே மீன மாசம் என்றும் பெயருண்டு. மீனத்திற்குள் பிரவேசிக்கிற தருணம், மீன சங்கராந்தி. சாவித்திரியானவள், அம்பிகைக்குத் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வகையில் செய்த நோன்பு இது. மீன சங்கராந்தி நேரத்தில், அம்பிகையை வழிபட்டு, காரடையும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து, பின்னர் பெண்கள் மஞ்சள் சரடு அணிந்துகொள்வார்கள். அம்பிகையின் அருளால் மாங்கல்யம் நிலைக்கும் என்பதே இதன் பொருள். உருகாத வெண்ணெயும் காரடையும் நான் தந்தேன்; ஒரு நாளும் என் கணவனை விட்டுப் பிரியாதிருக்க வரம் தா என்று அன்னையிடம் பிரார்த்திப்பார்கள்.

அம்பிகையின் அருளால், விதியை மதியால் மாற்றியவள் இல்லையா சாவித்திரி? சாவித்திரியை மையமாக வைத்து, இவள் பெயரிலேயே நெடுங்காப்பியம் ஒன்றை மகான் அரவிந்தர் இயற்றினார். வேத சுழற்சியே சாவித்திரியின் வரலாறு என்னும் கொள்கையில், அடையாள வரைபடம் ஒன்றையும் அரவிந்தர் கொடுத்துள்ளார்.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உயரிய, தூய ஆன்மாவே சத்தியவான். நிரந்தர சத்தியமான இறைமையின் அதிதேவதை சாவித்திரி.

தூய்மையும் ஒளிர்மையும் கொண்ட ஆன்மா (சத்தியவான்), தெரியாமலும் புரியாமலும் இருளுக்குள்ளும் அறியாமைக் காட்டுக்குள்ளும் சிக்கிவிடுகிறது. காணவேண்டியவற்றைக் காண மறந்து (அல்லது மறுத்து அல்லது மறுக்கும்படி வற்புறுத்தப்பட்டு), வெற்று மினுமினுப்புகளின் வஞ்சத்திற்கு உட்பட்டு, முறையான பார்வையைத் தொலைத்து (பார்வை இழந்த தியுமத்சேனர்), அறியாமைக் கானகத்தில் அலைந்து திரிகிறது. மனக் குதிரையைக் கட்டுப்படுத்தி, தியானம் உள்ளிட்ட ஆன்ம முயற்சிகள் வழியாக ஜீவசக்தியை ஒருமுகப்படுத்தினால் (அச்வபதி; அச்வம்=குதிரை), ஒளிப்பிழப்பின் வடிவாக அம்பிகையே ஆவிர்பவிப்பாள். இவளின் கையைப் பற்றிக் கொண்டு ஆன்மா பயணப்படும்போது, ஆன்மாவைத் தீமையிலிருந்து மேலேற்றி, மரணக் குழியிலிருந்து காப்பாற்றி, தன்னுடனேயே நிலைப்படுத்திக் கொள்வாள்.

சாவித்திரியின் வரலாற்றை மானுடப் பெண்ணின் கதையாக மகாபாரதம் விவரித்தாலும், அம்பாளின் பேரருளால் சாதித்தவளாகவே ஸ்ரீ தேவி பாகவதம் காட்டுகிறது. அம்பாளை எவ்வாறு வழிபடவேண்டும் என்பதும் சாவித்திரியின் வரலாற்றில் உண்டு.

காயேன மனசா வாசா யத் பாபம் குரதே நா:

தத் வத் ஸ்மரண மாத்ரேண பச்மிபூதம் பவிஷ்யதி

ஆமாம், காயத்தாலும் (உடலால்), மனத்தாலும் (மனசு), வாக்காலும் (வாசா) செய்த பாவங்கள் அனைத்தையும், தன்னை வழிபட்டால், பஸ்மம் ஆக்கிவிடுவாள் அம்பிகை.

தொடர்புக்கு:- sesh2525@gmail.com

Tags:    

Similar News