முக்கிய விரதங்கள்

இன்று முதல் 28 நாட்கள்: பக்தர்களுக்காக பட்டினி விரதத்தை தொடங்கிய சமயபுரம் மாரியம்மன்

Update: 2023-03-12 07:30 GMT
  • இந்த கோவிலில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும்
  • அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

பக்தர்களுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதத்தை இன்று முதல் தொடங்கினார்.

சமயபுரம் மாரியம்மன், மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், தன்னை நாடிவரும் பக்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறவும் இந்த விரதம் மேற்கொள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த விரதத்தின் போது அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம், கரும்புசாறு, இளநீர் ஆகியவை நைவேத்தியமாக அம்மனுக்கு படைக்கப்படுகிறது. பக்தர்களுக்காக விரதம் மேற்கொள்ளும் போது அம்மனுக்கு ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்த பக்தர்கள் பலவித மலர்களை கொண்டுவந்து சாத்துவது வழக்கம்.

சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோவிலின் ஈசான பாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டு உள்ளதால் இந்தகோவிலிலும் ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவரை போன்ற சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

அம்மனின் சுயம்புதிருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்சபலன் கிடைக்கும்.

மேலும், இந்த கோவிலில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்பதற்கு திருக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்று கள் உள்ளது. தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தது.

இதனால் இந்தத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பதுவேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக் காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.

மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்பு ஆகும்.

Tags:    

Similar News