முக்கிய விரதங்கள்

கண் நிறைந்த கணவன் கிடைக்க விரும்பும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்

Published On 2022-12-24 05:45 GMT   |   Update On 2022-12-24 05:45 GMT
  • கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.
  • பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

பாவை நோன்பு என்பது உண்மையில் கன்னிப் பெண்களுக்கானது. தனக்கு ஏற்றார்போல் வாழ்க்கைத் துணையை அடையவும், தனது மனதிற்கேற்றார் போல் ஒரு வாழ்க்கை அமையவும், கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.

பக்தியின் மிகுதியால், தன்னையும் ஆயர்பாடியில் பிறந்த ஒரு பெண்ணாக பாவித்து, தான் மிகவும் நேசித்த கடவுளான கண்ணனையே தன்னுடைய கணவனாக அடையவேண்டி, பாவை நோன்பு மேற்கொண்டு ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை. 

பன்னிரண்டு ஆழ்வார்களில், ஆண்டாள் மட்டுமே பெண் என்பதால், மற்ற ஆழ்வார்களுக்கில்லாத சிறப்பாக, கண்ணன் மீது கொண்ட பக்தியை அவளால் காதலாகவும் வழங்க முடிந்தது.

கண் நிறைந்த கணவன் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் பாவை நோன்பை கடைபிடித்தால் அந்த ஆசை நிறைவேறும்.

பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள்.

அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.

காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்து அவரவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும்படி வேண்டுவது வழக்கம். பாவை நோன்பு பெண்மக்கள் எடுக்கும் நோன்பு ஆகும்.

கண்ணனை மனத்தில் வரித்த ஆண்டாள் தன்னை ஆய்ப்பாடிப் பெண்களில் ஒருத்தியாகப் பாவித்துக் கொள்கின்றாள்.

திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.

அந்நோன்பைப் பற்றித் திருப்பாவை, நிகழ்ச்சி அடிப்படையில் பதிவு செய்துள்ளது.

Tags:    

Similar News