முக்கிய விரதங்கள்

இன்று மூன்றாம் பிறை விரதம்: சந்திர தரிசனம் செய்தால் தீரும் தோஷங்கள்...

Update: 2023-03-23 02:55 GMT
  • மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.
  • சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும்.

ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைதான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

இத்தகைய சிறப்புடைய மூன்றாம் பிறை சந்திர தரிசன தினமாக இன்று (வியாழக்கிழமை) தினம் அமைந்துள்ளது. இந்த மூன்றாம் பிறை சந்திர தரிசனம் தொடர்பாக ஒரு வரலாறு உள்ளது.

ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து கேலி செய்தான்.

இதனால் கோபம் அடைந்த விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தி சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். அந்த தவத்தின் பயனாக ஈசன் துணையுடன் தன் பழைய அழகை பெற்றான்.

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திற்கு 6,8,12-ம் வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் பெற்றோ அல்லது சனி,ராகு, கேது போன்ற அசுப கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ சந்திர தரிசனம் செய்து வணங்குவது தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

சந்திரனோடு சர்ப்பக் கிரகம் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவ ர்கள் சந்திர வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர் சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் ஆகியோர் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

ஜாதகத்தில் சந்திர தோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். அன்று மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.

சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும். கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும். நாளை வரும் பங்குனி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். எனவே சிவனை தரிசனம் செய்த புண்ணியத்தைப் பெற நாளை மறக்காமல் சந்திர தரிசனம் செய்யுங்கள்.

இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனிக்கிழமை வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.

சூரியனிடமும் சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெறுவது போன்றதாகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார்.

சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். இதை படி அளப்பது என்பார்கள். எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள். ஆயுள் அதி கரிக்க இறைவன் அருள் கிடைக்கும்.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.

Tags:    

Similar News