முக்கிய விரதங்கள்
விஷ்ணு

பங்குனி மாத வளர்பிறை ஆலமகீ ஏகாதசி விரதம்

Published On 2022-04-08 06:58 IST   |   Update On 2022-04-08 06:58:00 IST
பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் லட்சுமி தேவியின் அம்சமான நெல்லி மரத்திற்கடியில் பூஜைகள் செய்து வழிபடுவதால் இதற்கு ஆமலகி ஏகாதசி என்று பெயர் உண்டானது.
பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆலமகீ ஏகாதசி என்று பெயர். ஆலமகீ ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து திருமாலை வழிபட கோ (பசு) தானம் செய்த பலன் கிடைக்கும். இவ்விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

இந்த பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் இடப்பட்ட தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால் பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். மேலும் இந்த ஆமலகி ஏகாதசி தினத்தன்று ஒரு கலசத்தில் ஏழு வகையான தானியங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து, மகாவிஷ்ணுவை வழிபட்டால் நீங்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களும் சிறப்பான வெற்றிகளை பெற்று மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். உங்களுக்கு வாழ்வில் கடன், பணப்பற்றாக்குறை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.

Similar News