ஆன்மிகம்
கோவில் வெளிப்பிரகார மண்டபத்தில் துளசிமாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா: முத்தாரம்மன் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

Published On 2021-09-21 01:36 GMT   |   Update On 2021-09-21 01:36 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குலசேகரன்பட்டினம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு பக்தர்களின்றி நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் நாளான 15-ந்தேதி இரவில் நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டும் தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு, காளி, சிவன், பார்வதி, பிரம்மன், விஷ்ணு, நாராயணர், ராமர், லட்சுமணர், அனுமார் உள்ளிட்ட வேடங்களை அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர். அவர்கள், குலசேகரன்பட்டினம் சிதம்பரேசுவரர் கோவில் கடற்கரையில் புனித நீராடி, துளசிமாலையை கடலில் நனைத்து, கோவில் முன்பு வந்து அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

வழக்கமாக துளசிமாலையை அம்மன் பாதத்தில் வைத்து பூசாரி எடுத்து கொடுத்த பின்னர் பக்தர்கள் அணிவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக, கோவில் முன்பு பெரியவர்கள் அல்லது குழந்தைகளிடம் துளசிமாலையை கொடுத்து பக்தர்கள் அணிந்து கொள்கின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குலசேகரன்பட்டினம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, நேற்று கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடி, கோவில் வெளிப்பிரகார மண்டபத்தில் துளசிமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.வருகிற 6-ந்தேதி தசரா திருவிழா கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருந்து வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலிப்பார்கள். பின்னர் 10-ம் நாளில் சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவிலில் செலுத்துவார்கள்.
Tags:    

Similar News